வேடுவர் சமூகத்தின் தனித்துவங்கள்

இலங்கையின் பழங்குடியினர் அல்லது ஆதி குடியினர் என கருதப்படும் வேடர் சமூகத்தினர் இலங்கையின் பல பாகங்களில் சில சில குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இலங்கையின் கிழக்குப் பிரதேசத்திலே வாகரை, கழுவங்N;கனி, பனிச்சங்கேனி, பால்ச்சேனை, கானாந்தனை, அக்குறானை போன்ற இடங்களில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வியல் கோலங்கள் தனித்துவமானவை. ஏனைய சமூகத்தினரின் வாழ்வியல் நடைமுறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைமைகளை கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் நவீன நாகரிகத்தின் வருகை, நகர மயமாக்கம், மக்கள் குடியேற்றம் காரணமாக இவர்கள் ஜீவனோபாயத்தின் உறைவிடமாக இருந்த காடுகள் அழிக்கப்பட்டன. வேட்டையாடுவதற்குத் தடை, காட்டிலே தேன் எடுப்பதற்கு தடை. இவற்றின் காரணமாக தமது பாரம்பரிய தொழில்களை கைவிட்டு விவசாயம், மீன்பிடி போன்று வேறு தொழில்களை நாட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. தமது கலாசாரத்தைக் கைவிட்டு ஏனையவர்களின் கலாசார விழுமியங்களை உள்வாங்க வேண்டிய தேவையேற்பட்டது.

இவ்வாறான நிலைமைகள் குறுக்கிட்ட போதும் இச் சமூகத்தவர் இன்னும் தமது மூதாதையர்கள் பின்பற்றி வந்த வழிபாட்டு முறைகள், உணவு பதனிடும் முறைகள்,  வாழ்வியல் சடங்குகள் என்பவற்றை இன்று வரை பேணிப் பாதுகாத்து வருவது சிறப்பம்சமாகும்.

வேடர்கள் ஊடக மொழியாக தமக்கேயுரித்தான வேடுவ மொழியைக் கொண்டிருந்தனர். இந்த வேடர் மொழியானது இன்று  முற்றாக அழியும் நிலைக்கு வந்து விட்டது. தமது ஊடக மொழியினை கைவிட்டு பிற மொழிகளை  பேச வேண்டிய நிர்ப்பந்தம், வேறு மொழிகளை கற்க வேண்டிய நிர்ப்பந்தம், வேடுவர் எனக்கூறும் போது மற்றவர்கள் தரக்குறைவாக பேசுதல் ஆகிய காரணங்களால் அம்மொழிக்கு அந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆயினும் தமது தெய்வ வழிபாட்டு சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தும் மொழியாக வேடுவ மொழி காணப்படுகின்றது.

இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கு இயற்கையே அவர்களின் தெய்வமாக அமைந்தது. தமது தெய்வங்களுக்கு காட்டிலே இயற்கையாக கிடைக்கும் காய்கள், கனிகள், கிழங்குகள், இலை வகைகள், தூபவகைகள், தீபங்கள், சிலவகை பூக்கள் என்பவற்றையே பயன்படுத்தி வருகின்றனர். தமது பாரம்பரிய ஆயுதங்களான ஈட்டி, வில், அம்பு முதலியவற்றை ஆயுதங்களாக இன்றும் தமது சடங்குகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

வேடுவ சடங்குகளிலே முக்கியமாக இடம் பெறுவோர் பாட்டுக்காரர் கொட்டு எனப்படும் வாத்தியம் வாசிக்கும் பறைக்காரன், கபுறானா எனும் தெய்வக்காரன் ஆகியோர் இடம்பெறுகின்றனர். கொட்டு வாசிக்க வேடுவ மொழிப்பாடல் பாட தெய்வக்காரன் தலையில் சீலை கட்டி குருத்துச் சட்டை போட்டு வில், அம்பு, ஈட்டி, சட்டம் முதலிய ஆயுதங்களை எடுத்து ஆடினர். இவர்களின் வழிபாட்டில் மூதாதையர் வழிபாடு முதன்மைப்படுத்தப்பட்டு ஏனைய தெய்வங்கள் வரவழைக்கப்படும். கரடித் தெய்வம், மாறாத்தெய்வம் முதலியன முக்கிய தெய்வங்களாகும். இவ்வாறு இச்சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
   
    வேடுவ சமூக மக்கள் தங்களுக்கு தேவையான எந்த பொருளாயினும் காட்டிலேயே பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வாழ்ந்தனர். தங்களின் தேவைக்கு மேலதிகமான பொருட்களை உலர்த்தி வைத்தல், மற்றும் அயல் பிரதேசங்களுக்கு கொண்டு சென்று விற்றல் முதலான வேலைகளையும் செய்தனர். அந்த வகையில் தங்கள் இன மக்களுக்கு நோய்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பதற்கான மருத்துவப் பொருட்களையும் காட்டிலே பெற்றுக் கொள்கின்றனர். காடுகளிலே கிடைக்கக் கூடிய மூலிகைகளைக் கொண்டு, பெறப்பட்ட மருந்து வகைகளை உண்டு அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்திக் கொள்கின்றனர். மருத்துவம் செய்பவர்களை 'பரிகாரி' என்று அழைக்கின்றனர். இவர்களிடையே மேற்கொள்ளப்படுகின்ற மூலிகை மருத்துவ முறையினை வெளியாட்களுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. ஏனெனில் வெளியாட்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது அவர்கள் செய்கின்ற மூலிகை மருத்துவம் பலிக்காது என  குறிப்பிடுகின்றனர்.

    மேலும் இம்மக்களிடையை பல வேறுவகையான நம்பிக்கைகள் நிலை பெற்றுள்ளதினை அறியக் கூடியதாகவுள்ளது. மனித வாழ்வில் நிகழும் அனைத்தும் இறைவனால் கொடுக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை மதங்கள் போதிக்கினறன. இதனாலேயே தம் வாழ்வில் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் ஈட்டுவதற்கு வழிகாட்டுமாறு இறைவனை (முருகன், வள்ளி, இயற்கை) வேண்டுகின்றனர். அந்த வகையில் இவர்களிடம் காணப்படுகின்ற   நம்பிக்கைகள் பற்றி நோக்கும் போது: காகங்கள் கரைதல், கிளி தலை கீழாக தொங்குதல், பறவைகள் ஒலியெழுப்புதல்,  தும்மல், வாய்கள் பதறிப் போய் குரைத்தல், மனைவியின் பொட்டு அழிதல் போன்ற நிகழ்வுகள் நிகழும் போது தாம் நினைத்த வேலையை அல்லது செயற்பாட்டையோ செய்வதில்லை என தெரிவிக்கின்றனர்.
   
    இவை தவிர பிறப்பு, இறப்பு, திருமணச் சடங்கு, ருதுவாதல் போன்ற எந்த வகையான சடங்காயினும் தமது  பாரம்பரிய நடைமுறைகளையே பின்பற்றுகின்றனர். அண்மைக்காலங்களில் இவர்களின் சடங்கு முறைகளில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தாம் பரம்பரை பரம்பரையாக கடைப்பிடித்து வந்த சடங்களில் நம்பிக்கைகளில் இன்னும் நிலைகுலைந்து விடவில்லை இப்போதும் இதனையே கடைப்பிடித்து வருகின்றனர் என்றே கூறவேண்டும்;.


இத்தகைய பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டியதும் பாதுகாக்கப்பட வேண்டியதும் நம் அனைவரினதும் கடமையாகும். அந்த வகையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையினரால் நடாத்தப்பட்ட பாரம்பரிய அரங்க ஆற்றுகை நிகழ்வில் இச்சடங்கு நிகழ்த்துகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

       
ம.கனிதவதனி
விடுகை வருடம்,
நுண்கலைத் துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.