வைத்தியர்களின் உதவியாளர்களே தாதியர் என்பது பழைய கருதுகோள்

தாதியம் என்றால் என்ன என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், 1973 ஆம் ஆண்டு வேர்ஜீனியா ஹெண்டர்ஸன் என்பவரால் வழங்கப்பட்ட வரைவிலக்கணத்தையே சர்வதேச தாதிய சபை ஏற்றுக் கொண்டுள்ளது.

அதாவது, ‘தனிப்பட்ட ஒருவருடைய சுகத்தைப் பேணி அதை உயர்வடையச் செய்யவும், நோய்கள் வராமல் பாதுகாக்கவும், நோய் வந்த போது அதிலிருந்து குணம் பெறவும், சிகிச்சையின் பின்னர் மீண்டும் பழைய நிலையைப் பேணவும், சுகாதாரக் கல்வியை ஊட்டவும், நோய் நிலை குணமடையாதவிடத்து சமாதானமான மரணத்தை எய்தவும் அதற்குரிய வழிவகைகளைக் கையாண்டு நடைமுறைப்படுத்துதலே 'தாதியம்' எனப்படும்.


மேலும், தாதியம் என்பது தனிப்பட்ட ஒருவருக்கோ, ஒரு குடும்பத்துக்கோ, ஒரு சமுதாயத்துக்கோ செய்யும் ஒரு சேவை. இது ஒருவர் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படும் போது அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்து பராமரிப்பளித்தல் எனும் பொருள்படும்.

யாவரினதும் நலத்திற்காக பொதுநல சேவையாக இன, மத, பொருளாதார பேதமின்றி தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சேவையாக தாதியம் கணிக்கப்படுகிறது. சுகாதார சேவையிலே இது உயர்ஸ்தானத்தைப் பெறுகிறது.

உயர் தொழில் (Profession) என்பது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

நீதியியல் மூலகங்களுடன் வேலை இணைந்திருக்கும். அது மனித, சமூக நன்மைகளை மேம்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். தொழிலினூடாக வழங்கப்படும் சேவைகள் விசேட அறிவு, ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும். அவ்விசேட அறிவு, ஆற்றல் என்பன விஞ்ஞான முறைக்கூடாக விருத்தியடைந்தவையாக இருக்கும்.

உயர் தொழில் என்பது வேலையின் ஒரு வடிவமாக விசேடமாக சமூகத்தில் நேர்மையானதாக மதிக்கப்படுவதாகவும், கற்றறிந்த மனிதனால் மட்டுமே முடிந்ததாகவும், விசேட பயிற்சியை உள்ளடக்கியதாகவும் இருக்கும். அது சமூக, விஞ்ஞான அறிவை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தொழிலின் அங்கத்தவர்கள் இவ்வறிவை பிரச்சினைகளை இனங்காணவும், தீர்க்கவும் பயன்படுத்துவார்கள். தொழிலினால் வழங்கப்படும் சேவைகள் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவையாகவும் மனித சமூக நன்மைகளை அபிவிருத்தி செய்யும் அடிப்படையைக் கொண்டதாகவும் அமையும்.

ஒரு தொழிலானது சமூகத்துக்கு வழங்கும் சேவைகளை வளர்த்துக் கொள்வதற்காக தனது அறிவை ஆராய்ச்சியினூடாக விருத்தி செய்ய வேண்டும். நடைமுறைக்குள் பிரவேசிப்பவர்களின் தகைமையை தொழிலானது தீர்மானிக்கும். ஒரு தொழிலானது நீதி நெறிக்கோவையை தன்னகத்தே கொண்டிருக்கும். சமூகத்துக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக ஒரு தொழிலானது கல்வி நிலையங்களுடன் இணைந்த கற்கை நெறிகளை உள்ளடக்கியதாகவிருக்கும்.

உத்தியோகபூர்வ தாதிய சேவையானது, மனித சமூக நன்மைகளை மேம்படுத்துவதாகும். நோயுற்றோருக்கு வழங்கப்படும் சேவைகள் விஞ்ஞான அறிவு, ஆற்றல்களை உள்ளடக்கியிருப்பதன் மூலம் இதை அடைவதற்கு தாதியம் உதவுகின்றது. இச்சேவைகள் மருத்துவ, துணை மருத்துவக் குழுக்களின் பங்களிப்புடன் வழங்கப்படும். மனிதனின் உடல், உள, ஆன்மிகத் தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடியவையாகவே உத்தியோகபூர்வ தாதிய சேவை அமைந்திருக்கும்.

உத்தியோகபூர்வ தாதி என்பவர், அங்கீகரிக்கப்பட்ட தாதிய கல்லூரியில் பட்டம் பெற்றவராகவும் அந்த நாட்டில் தொழில் புரிவதற்கு அனுமதிக்கப்பட்டவராகவும் இருப்பார். இலங்கையில் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தாதிய கல்லூரிகளில், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாட விதானத்தைப் பெற்று பொதுத் தாதியத்தில் டிப்ளோமா என்னும் 3 வருட கற்கை நெறியைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதன் ஆட்சேர்ப்புத்திட்டத்தில், இலங்கையில் 5 சதவீதமானோர் ஆண்களாவர்.

இலங்கையிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் ஆண் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதிகளிலும், விசேட பிரிவுகளிலும் ஆண் தாதிய உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதே இதற்குரிய பிரதான காரணமாகும். அதேவேளை, பெண் தாதியர்கள் எல்லா விடுதிகளிலும் பணிபுரிய அனுமதிக்கப்படுவதால் தாதிய கற்கை நெறிக்கான ஆட்சேர்ப்புத் திட்டத்தில் 95 சதவீதம் பெண்களுக்கு இடம் வழங்கப்படுகிறது. இதற்குரிய அடிப்படைத் தகைமை அரசாங்கத்தின் திட்டங்களுக்கேற்ப வேறுபட்ட போதிலும் தற்போது க.பொ.த. (உ/த) விஞ்ஞானப் பிரிவில் அதிகுறைந்தது மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருக்க வேண்டியதுடன் ஏனைய சில நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

தற்போது இலங்கையில் க.பொ.த. (உ/த) வெட்டுப்புள்ளி (இஸட் புள்ளி) அடிப்படையில் தாதியத்தில் B.Sc பட்டப்படிப்பு கற்கை நெறி பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகிறது. இதில் 3 வருடங்களில் பொதுப்பட்டமும், 4 வருடங்களில் விசேட பட்டமும் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளைப் போன்று தாதிய கலாநிதிகளையும், தாதிய நிபுணர்களையும் இலங்கையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

இலங்கை மருத்துவ சபையினால் அல்லது இலங்கை தாதிய சபையினால் பட்டம் பெற்ற தாதியர்களுக்கு தொழில்சார் தகைமையாக ‘RN’ என்ற பெயரடை வழங்கப்படும்.

தாதியர்கள் உண்மையில் வைத்தியர்களுடைய உதவியாளர்களல்லர். இது சில சூழ்நிலைகளில் சாத்தியமானாலும் மிக அதிகளவான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய நோயாளிகளை சுதந்திரமாகப் பராமரிப்பதுடன் ஏனைய தாதியர்களுக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

பதிவு செய்யப்பட்ட தாதியர்கள் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கிறார்கள், அவர்களுடைய மருத்துவ வரலாற்றைப் பதிவு செய்கிறார்கள், உளரீதியான ஆதரவு வழங்குகிறார்கள். தொடர்ச்சியான பராமரிப்பு வழங்குகிறார்கள். தாதியர்கள் நோய் நிர்ணய பரிசோதனைகள் செய்வதன் மூலம் வைத்தியர்களுக்கு உதவுகிறார்கள். தாதியர்கள் அநேகமாக எப்போதும் ஏனைய தாதியர்களுடன் இணைந்து சுயாதீனமாக பணி புரிகிறார்கள்.

இலங்கை சுகாதார சேவையின் புதிய வகைப்படுத்தலின்படி,

போதனா வைத்தியசாலை, மாகாண பொது வைத்தியசாலை, மாவட்ட பொது வைத்தியசாலை, தள வைத்தியசாலை (A மற்றும் B நிலை), பிராந்திய வைத்தியசாலை, ஆரம்ப வைத்திய பராமரிப்பு அலகு என 6 வகையாகக் காணப்படுகிறது.

ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு அலகுகளில் வைத்தியர்களும், சிற்றூழியர்களுமே சேவையாற்றுவார்கள். இங்கு தாதிய உத்தியோகத்தர்களுக்கு நியமனம் இல்லை. ஆனால் ஏனைய வைத்தியசாலைகளில் தாதியர்கள் முக்கியமான இடம் வகிக்கின்றனர்.

தாதியர்கள் வைத்தியர்களின் உதவியாளர்கள் என்ற பழைய எண்ணக்கரு உண்மையாக இருக்குமானால் ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு அலகுகளில் தாதியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அத்தோடு ஏனைய வைத்தியசாலைகளிலும் வெளி நோயாளர் பிரிவுகளில் வைத்தியர்களுடன் சிற்றூழியர்கள் மட்டுமே வேலைக்கமர்த்தப்படுகிறார்கள். அங்கும் தாதியர்களுக்கு வேலை இல்லை. ஆகவே, இதிலிருந்து தாதியர்கள் வைத்தியர்களுக்கு உதவியாளர்கள் அல்ல என்பதை அறியலாம்

அவர்கள் நோயாளர்களுக்கு சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்கும் உயர் தொழிலாளர்கள் (Professionals) இவர்களுக்கு நோயாளர் தங்கி சிகிச்சை பெறும் விடுதிகளிலும், விசேட பிரிவுகளிலுமே நியமனம் வழங்கப்படுகிறது.

ஒரு தாதிய உத்தியோகத்தர் பராமரிப்பு வழங்குபவர், சிகிச்சைக்கான தீர்மானமெடுப்பவர், நோயாளியின் சட்ட ஆலோசகர், விடய முகாமையாளர், புனர்வாழ்வளிப்பவர், தொடர்புபடுத்துபவர், செளகரியமளிப்பவர், கல்வியூட்டும் ஆசிரியர், ஆற்றுப்படுத்துபவர், தலைவர் (வழிகாட்டுபவர்) ஆகிய பல பாத்திரங்களை ஏற்கிறார்.

ஒரு உயர் தொழிலின் சிறப்பியல்புகளான கல்வி, அறிவு, சேவை, சுதந்திரம், நீதி நெறிக்கோவை ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட உயர் தொழில் தாதியச் சேவையை விருத்தி செய்ய பாடுபடுவது அவசியம்.

ஜே.எம்.எம். றியாஸ்

(தாதிய உத்தியோகத்தர்)