Thursday, February 18, 2016

தற்கொலை உளவியலும் தற்காப்பு உளநலமும்

ads


காரணங்கள் எதுவாகயிருப்பினும், தற்கொலை என்பது தவறு என்பதே நிதர்சனம். கடன் தொல்லை, கற்கமுடியவில்லை, காதல் தோல்வி என தனிமனித பிரச்சினைகளிலும், பல்வேறு சமூக நலன் சார்ந்த பொதுப் பிரச்சினைகளிலும், தீர்வு தேடும் ஆயுதமாகத் தற்கொலை பயன்படுத்தப்பட்டிருப்பினும், ஓரிரு அறிவற்ற சுயநல அரசியல் பேச்சுக்களைத் தவிர, ஒட்டுமொத்த சமூகமும் தற்கொலையை தவறென்றே ஏற்றிருக்கிறது. 

வரலாறுகள் கூட இவற்றை வாஞ்சையோடு பதிவு செய்வதில்லை. தற்கொலைச் சிந்தனையானது தனிமனித வட்டத்தையும் தாண்டிய, பொதுச் சுகாதார முக்கியத்துவமுடைய, சமூக உளவியல் வியாதி என்பதை என்றென்றும் நினைவில் கொள்ளல் வேண்டும். 
தற்கொலைத் தகவல்கள்: தேசமும் சர்வதேசமும்
170 நாடுகளைக் கொண்ட உலக தற்கொலை தரவரிசைப் பட்டியலில், தென் அமெரிக்க நாடான கயானா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், முறையே முதல் இரண்டு இடங்களையும்,  இலங்கை மூன்றாவது இடத்தையும் பெற்றிருக்கிறது.
  • வருடாந்தம் உலகளவில் எட்டு இலட்சத்துக்கு அதிகமானோரும், இலங்கையில் நாளாந்தம் சராசரியாக 11 பேரும், ஆண்டுதோறும் அண்ணளவாக 4,000 பேரும் தற்கொலையினால் காவு கொள்ளப்படுகின்றனர். 
  • 15 - 29 வயதுப்பிரிவினரின் இறப்புக்களில், தற்கொலை இரண்டாம் நிலைக் காரணியாக அமைகிறது.
  • 75 சதவீதமான தற்கொலை மரணங்கள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளிலேயே நிகழ்கின்றன.
  • முந்தைய தற்கொலை முனைப்புக்கள், மீண்டும் தற்கொலையில் ஈடுபடுவதற்கான முதன்நிலை அபாயக் காரணிகளாக அமைகின்றன.
  • நஞ்சருந்துதல், தூக்கில் தொங்குதல் போன்றவை பிரதான தற்கொலை உத்திகளாக உபயோகிக்கப்படுகின்றன. 
தற்கொலையை தூண்டும் காரணிகள்?  
உள நோய்கள், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிய நிலை, முன்பும் தற்கொலைக்கு முயற்சித்திருத்தல், குடும்ப தற்கொலைப் பின்னணி, நாட்பட்ட நோய்த் தாக்கம், மிகவும் நேசித்த உறவின் பிரிவு அல்லது இழப்பு, தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு, ஏதாவது வன்முறை மற்றும் துஷ்பிரயோகப் பின்னணிகள்.  
மனவழுத்தம் (Depression), இருமுனையப்பிறழ்வு (Bipolar disorder), மனப்பிழவு (Schizophrenia) போன்ற உளவியல் தாக்கங்களில், மனவழுத்தமே தற்கொலைக்கான மிக முக்கிய காரணியாகயிருக்கிறது.  
தற்கொலையினால் தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்பவர்களில், 90 சதவீதத்திற்கும், அதிகமானவர்கள் இறக்கின்ற தருவாயில், ஆகக் குறைந்தது ஏதொவொரு உளவியல் தாக்கங்களுக்கு உட்பட்டிருப்பர்.  
தற்கொலை: ஆபத்து நிலையை அளவிடல் 
ஒவ்வொருவருடைய தற்கொலை எண்ணங்களும் முயற்சிகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. திட்டமிடல்களற்ற எண்ணங்களை மாத்திரமுடையவர்கள் குறைந்தளவானதும், எண்ணங்களோடு உயிராபத்தற்ற திட்டமுடையவர்கள் மத்தியளவானதும், குறிப்பிட்ட திட்டமிடல் சிந்தனையுடையவர்கள் அதிகளவானதும், தெளிவான எண்ணங்களையும் திட்டவட்டமான திட்டமிடல்களையும் உடையவர்கள் தீவிரமானதுமான ஆபத்துக் குழுக்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்கொலை: எச்சரிக்கை அறிகுறிகள்? 
தற்கொலை பற்றி முனைப்போடு கலந்துரையாடல், மருந்துகள் உட்பட்ட உயிர்பறிக்கும் உபாயங்களை தேடுதல், தற்கொலை மற்றும் மரணம் பற்றி அதீத அக்கறையுடன் கவிதை கட்டுரை எழுதுதல், எதிர்காலம் பற்றி நம்பிக்கை இழந்திருத்தல், சுயவெறுப்புணர்வு, வழமைக்கு மாறான வாழ்த்துக்களும் எதிர்பாராத வருகை தருதல்களும், நண்பர்கள், குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து பெரிதும் விலகியிருத்தல், மதுப்பாவனை, பாதுகாப்பற்ற சாரத்தியம் போன்ற சுய அழிவு நடவடிக்கைகளில் ஈடுபடல், திடீரென அமைதியாதலும் சந்தோசப்படுதலும் போன்றவற்றினை பிரதானமாக கொள்ள முடியும்.  
இளம் பராய தற்கொலை 
மிக இலகுவாக உணர்ச்சி வசப்படுவதன் மூலம், இப்பராயத்தினர் வெகுவாகவே அழுத்தங்களுக்கும் மனக்குழப்பமடைதல்களுக்கும் உள்ளாகின்றனர். 
குறிப்பாக சுயமரியாதை, அந்நியப்படுத்தப்படல், சுய சந்தேகம், சக பாடிகளின் விரோதப் போக்கு, ஏனையவர்களின் தற்கொலையை பரிகாரமாக அங்கீகரித்தல், பாலியல் உட்பட பல்வகையான துஷ்பிரயோகங்கள், குடும்ப மற்றும் சமூக ஒதுக்குதல்கள் போன்றவற்றுக்கான தீர்வுத் தேடல்களில் ஏற்படுகின்ற கலக்க மன நிலை, நீண்ட நாட்களுக்கு தெளிவடையாமல் தொடர்வதனால் உருவாகும் மனச்சோர்வே அவர்களை தற்கொலை என்ற தவறான தீர்வுக்குள் தள்ளுகிறது.  
இளம் பராய தற்கொலை: அபாய அறிகுறிகள்?
உணவு மற்றும் உறக்கத்தில் நாட்டமின்மை, குடும்பம் மற்றும் நண்பர்கள் சார்ந்த நாளாந்த நடவடிக்கைகளில் விருப்பின்மை, வன்முறைகளைப் பிரயோகித்தல், மது மற்றும் போதைப் பொருள் மீதான நாட்டம், வழமைக்கு மாறான புறத்தோற்ற புறக்கணிப்பு, தொடர்ச்சியான சலிப்பு, கற்றலில் கவனம் கலைதலும் குறைதலும், வெகுமதிகள் மற்றும் பாராட்டுக்களைப் புறக்கணித்தல், வயிற்றுவலி, தலைவலி மற்றும் உடற்சோர்வு போன்ற உணர்ச்சிவச அறிகுறிகளை வெளிப்படுத்தல்.  
முதுமைப் பருவ தற்கொலை
இன்றைய காலத்தில் முதுமைப் பருவமும் பல்வேறு காரணிகளால் பாராமுகத்துக்கு உட்பட்ட பரிதாப பருவமாகியிருக்கிறது. தனிமைக் கொடுமை, குடும்ப மற்றும் சமூக புறக்கணிப்பு, இயற்கையான இயலாமையும் நோய்த் தொல்லைகளும், வாழ்க்கைத் துணை இழப்பின் தாங்க முடியாத துன்பம், தவிர்க்க முடியாத தங்கியிருத்தல்கள், வயோதிபத்திலும் வேலைப்பழு, சிதைவடையும் மனம் அல்லது மறதி நோய் போன்றவை முதுமைப்பருவ தற்கொலை முயற்சிகளுக்கு வழி வகுக்கின்றன.
முதுமைப் பருவ தற்கொலை: அபாய அறிகுறிகள்?
இறப்பு மற்றும் தற்கொலை கட்டுரைகளை வாசிப்பதில் நாட்டம், நித்திரைப் பிறழ்வு, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துதல், அதிகளவிலான சுய வெறுப்புணர்வு, மருந்துகளை விடவும் மதுவில் அதீத நாட்டம், மருந்துகளை சேமிப்பதில் நாட்டம், உயில் எழுதுதலில் திடீரென அக்கறை காட்டுதல், வழமையான குடும்ப மற்றும் சமூக நிகழ்வுகளிலிருந்து ஒதுங்க முனைதல்.  
தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்தும் தகாத நடவடிக்கைகள்? 
பாலியல் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்புணர்வுகள், வாழ்க்கைத்துணையின் பரிபூரண சம்மதமற்ற விவாகரத்து, வீட்டு வன்முறைகள், பல்பரிமான சமூக ஒதுக்குதல்களும் ஒடுக்குமுறைகளும், ஒழுக்கமற்ற பாலியல் தொடர்புகள், தேவையற்ற கடனாளியாதல், கற்றல் - கற்பித்தல் காழ்ப்புணர்வுகள், சந்தர்ப்பவச கர்ப்பம் தரித்தல், கபடத்தன காதல் தோல்விகள், போலிப் பொதுநலப் போர்வையால் போர்த்தப்பட்டு மூளைச் சலவைக்கு உட்படல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  இருந்தபோதிலும், இவை எதற்குமே தற்கொலைகள் பொருத்தமான தீர்வாக அமைந்ததில்லை.  
தற்கொலை தொடர்பான தவறான தர்க்கங்களும் (த.த) உண்மையான உளவியலும் (உ.உ) 
த.த:    பிறரின் கவனத்தை ஈர்க்கவே, தற்கொலை செய்யப்போவதாக கூறுகின்றனர்.  
உ.உ:    தங்களைச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளால், நம்பிக்கையிழந்து மனமுடைந்திருப்பதனால் அது ஆபத்தான பேச்சு. 
த.த:    தற்கொலை செய்வதாக கூறுபவர்கள், உண்மையில் தங்களை தாங்கள் கொல்ல முயற்சிப்பதில்லை. 
உ.உ:    பெரும்பாலும் அவ்வாறு செய்வார்கள். 
த.த:    தற்கொலைகள் அனைத்துமே எவ்வித அபாய அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமலேயே நிகழ்கின்றன. 
உ.உ:    எப்போதுமே ஏதாவது அபாய அறிகுறிகள் நிச்சயமாக வெளிப்படுத்தப்படும். 
த.த:    தற்கொலை செய்து கொள்வதாகத் தீர்மானித்தவரின் மரணத்தை, எவ்விதத்திலும் தடுத்து நிறுத்த முடியாது. 
உ.உ:    தற்கொலை செய்ய நினைப்பவர்களின் அடிப்படை எண்ணம், மன வேதனையிலிருந்து விடுபடுதல் என்பதால், தற்காப்பின் மூலம் இலகுவாக தடுக்கலாம். 
த.த:    குறிப்பிட்ட சில இனத்தவர், வயதினர் , சமூக பொருளாதாரக் குழுவினர் மாத்திரமே தற்கொலையில் ஈடுபடுகின்றனர். 
உ.உ:    எவ்வித பேதங்களுமின்றி எல்லோரையும் பாதிக்கும். 
த.த:    தற்கொலைக்கு முயற்சித்து தப்பிப்பிழைத்தவர்கள் மீண்டும் முயற்சிக்க மாட்டார்கள். 
உ.உ:    தப்பபிப்பிராயம், வேதனையிலிருந்து விடுபடவில்லையெனில் இன்னும் அதிகமாக முயற்சிப்பார்கள். 
த.த:    பித்துப் பிடித்தவர்களே தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். 
உ.உ:    இல்லை... இல்லை... தாங்க முடியாத வேதனைகளில் உழலுகின்ற எவருமே தவறுதலாகவேனும் தற்கொலைக்கு முயற்சிக்கலாம். 
த.த:    வலுவற்ற மனநிலையுடையோரே தற்கொலைக்கு இரையாகின்றனர். 
உ.உ:    தவறு, மிகவும் வலுவான நெஞ்சுரம் உடையவர்களே பெரும்பாலும்     தற்கொலையாளியாகின்றனர். 
த.த:    தங்களுடைய பிரச்சினைகளில் இருந்து மீளும் முயற்சியில், மற்றவர்களை திசை திருப்பும் கபடத்தனமே தற்கொலை எண்ண வெளிப்பாடாகும். 
உ.உ:    அப்படியில்லை, அனேகமானவர்களின் ஆழ்மனப்பதிவுக் கீறல்களே மற்றவர்களுக்கு மேற்கூறியவாறு புலப்படலாம். 
த.த:    நிச்சயமாக, இறப்பே இறுதியான தீர்வு என்பதே தற்கொலைக்கு முயற்சிப்பவர்களின் தீர்க்கமான முடிவாகும். 
உ.உ:    யதார்த்தம் யாதெனில், அனேகமானவர்கள், இறக்கின்ற இறுதி நொடியில், இறப்பதனை ஏற்றுக்கொள்ளாமல், அவசரப்பட்டதனால் அநியாயமாய் அகால மரணத்தை தழுவுகின்றனர். 
த.த:    மது மற்றும்போதைப் பொருள் பாவனைக்கும் தற்கொலைக்கும் எவ்வித கணிசமான தொடர்புகளும் கிடையாது. 
உ.உ:    மிகப்பெரிய தவறு, போதையின் பிடிக்குள் சிக்கிக் கொண்டவர்கள், அவர்களை அவர்களே அந்நியர்களாக அடையாளப்படுத்தி, அவர்களுக்கு அளிக்கின்ற மிகக் கொடூர தண்டனையே தற்கொலையாகும். 
தற்கொலை: தற்காப்புத் தடுப்பு முறைகள்?  
உளநலப் பாதிப்புக்குட்பட்டவர்கள், போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள், நாட்பட்ட நோய்களினால் அவஸ்தையுற்று விரக்தியோடு காலம் கழிப்பவர்கள் போன்றோரை பரிவோடு அணுகி, அவற்றிலிருந்து இலகுவாக மீட்டெடுப்பதற்கான உளநல வேலைத்திட்டங்களை முதன்மைப்படுத்திய பாதுகாப்பு பொறிமுறைகளை செயற்படுத்தல்.
அத்தோடு மருந்து மற்றும் மதுப் பாவனைகளின் தீங்குகளை கட்டுப்படுத்தும் கொள்கை வகுப்பும் செயற்பாடுகளும், தற்கொலை உபாயங்களை அணுகுவதற்கான கட்டுப்பாட்டு பொறிமுறைகள், வெகுஜன ஊடகங்களின் மூலமான விழிப்புணர்வுகள், குறிப்பாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு தப்பிப்பிழைத்தவர்களுக்கான தொடர்ச்சியான உளவள ஆலோசனைகளும் நெறிப்படுத்தல்களும் தற்கொலைத் தண்டனையிலிருந்தான மீட்பு பொறிமுறைகளாகும். 
மேலும், தற்கொலையானது, பல்வேறு சிக்கல்களையுடைய பிரச்சினையாதலால், சுகாதாரம், கல்வி, தொழில்வாய்ப்பு, பாதுகாப்பு, சட்டம், நீதி, வணிகம், விவசாயம் அரசியல் மற்றும் ஊடகம் ஆகிய பல்துறைகளின் கூட்டு சிபாரிசுகளை உள்ளடக்கிய கூட்டிணைந்த தடுப்புவழிப் பொறிமுறைகளே, ஒட்டுமொத்தத்தில் தற்கொலைத் தாகத்தை தணியச் செய்யும்.  
வாசகர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மற்றும் எண்ணங்களை  vetkartheepan@yahoo.com அல்லது health@battinews.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கலாம்
Dr. கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்.

தற்கொலை உளவியலும் தற்காப்பு உளநலமும் Rating: 4.5 Diposkan Oleh: BATTINEWS MAIN
 

Top