இந்தோனேசியாவில் திருமணத்திற்கு புறம்பாக உறவு கொண்டதற்கும், மது அருந்தியதற்கும் தம்பதிக்கு 140 கசையடிகள்




இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறி திருமணத்திற்கு புறம்பாக உடலுறவு கொண்டதற்கும், மது அருந்தியதற்கும் ஆணொருவருக்கும் பெண்ணொருவருக்கும் தலா 140 கசையடிகள் வழங்கப்பட்டன.

பொது பூங்கா ஒன்றில் வியாழக்கிழமை (ஜன 29) மக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. திருமணத்திற்கு புறம்பான உறவுக்காக 100 அடிகளும், மது அருந்தியதற்காக 40 அடிகளும் என மொத்தம் 140 கசையடிகள் வழங்கப்பட்டன.

21 வயதுடைய அந்தப் பெண், கசையடிகளைத் தாங்க முடியாமல் கதறி அழுது பின்னர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் அங்கிருந்த நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதே மேடையில், மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததற்காக (Khalwat) ஷரியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும், அந்தப் பெண்ணுக்கும் தலா 23 கசையடிகள் வழங்கப்பட்டன. அந்த அதிகாரி பணியிலிருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், ஆச்சே மாகாணத்தில் மட்டும் 2001-ம் ஆண்டு முதல் ஷரியா சட்டம் அமுலில் உள்ளது. இங்கு சூதாட்டம், மது அருந்துதல், ஓரினச்சேர்க்கை மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகளுக்கு கசையடி வழங்குவது சட்டப்பூர்வமான தண்டனையாக உள்ளது.

இந்தக் கொடூரமான தண்டனை முறைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது மனிதத்தன்மையற்ற செயல் எனவும், சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு ஒப்பந்தங்களுக்கு எதிரானது எனவும் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

"கசையடி என்பது ஒரு உடல்ரீதியான சித்திரவதை. இது நவீன சமூகத்தில் இடம்பிடிக்கக் கூடாத ஒன்று," என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.