காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மூவரின் உடல்நிலை மோசம் – ஒருவர் வைத்தியசாலைக்கு செல்ல மறுப்பு


இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், இன்று புதன்கிழமை (28) மூன்று பேரின் உடல்நிலை மோசமடைந்துள்ளமை கவலைக்கிடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குதல் அல்லது அவர்களது பதவி நிலைகளை முறையாக ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மூன்று பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வைத்தியர்கள் மற்றும் அவசர அம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு உடனடி வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வைத்திய பரிசோதனைகளின் போது, அவர்களில் ஒருவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதாக காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த நபரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், அவர் வைத்தியசாலைக்கு செல்ல மறுத்ததுடன், தங்களது கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்று பெற்றுத் தரப்படும் வரை, உயிர் போனாலும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்ட இடத்தில் வைத்து தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

இதனிடையே, போராட்டக்காரர்களின் உடல்நலன் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக சமூக ஆர்வலர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் அரசாங்கத்தினால் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.