சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த சஞ்சித் லக்ஷ்மன்

அரச இசை விருது வழங்கல் - 2016ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது மட்டக்களப்பைச் சேர்ந்த சஞ்சித் லக்ஷ்மனின் காற்றே என் வாசல் என்ற பாலடலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் சஞ்சித் இசையமைத்த உயிரே தெனம் உன்னைத்தான் எனும் பாடலுக்காக சிறந்த பாடகி விருதினை நிருக்ஷா பாய்வாவும் வேண்டும் வேண்டும் எனும் பாடலுக்காக இமக்ஷன் இம்மானுவேல் சிறந்த சிறுவர் பாடல் இயக்கத்துக்குமான விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.


25 வயதான சஞ்சித் லக்ஷ்மன் மட்டக்களப்பினைப்பிறப்பிடமாகக் கொண்டு தனது ஆரம்பக்கல்வியினை கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்திலும் பின் புனித மிக்கேல் கல்லூரியில் உயர் தரம் வரையிலும் கற்றவர். கணிதப்பிரிவில் கற்ற சஞ்சித் லக்ஷ்மன் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு வருகிறார்.

2010ஆம் ஆண்டு முதல் இசைத்துறையில் ஈடுபட்டு வரும் சஞ்சித் லக்ஷ்மன் கைகூ நிலவே> உன்னாலே உன்னாலே> உயிரின் வாசம்> மரப்பாச்சி பொம்மை> அப்பா குறும்படத்தில் தாலாட்டுப்பாடும் உள்ளிட்ட பல பிரபல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

30 பாடல்கள் வரையில் இசையமைத்துள்ள சஞ்சித் லக்ஷ்மன்  25 வரையான குறும்படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம்  21 ஆம் திகதி மாலை நெளும் பொக்குண மஹிந்த ராஜபக்ச கலையரங்கில் நடைபெற்ற இந்த அரச இசை விருது வழங்கல் வைபவம் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன மற்றும் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும ஆகியோரின் அழைப்பில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இந்த விருது வழங்கலில் இந்தியாவின் பரனாஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இசைப் பேராசிரியர் வீ. பாலாஜி ஆகியோரும் பங்கு பற்றினர்.

உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச இசை ஆலோசனைக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் 2015 ஆம் இலங்கையில் வெளிவந்த பாடல்கள்> பாடல் வரிகள்> இசையமைப்பாளர்> சிறுவர் பாடல்கள்> சிறந்த பாடகன்> சிறந்த பாடகி> சிறந்த திரை ஒளி ஆக்கம்> சிறந்த கிராமிய பாடல் எனும் 27 துறைகளில் சிங்களம்> தமிழ் ஆகிய மொழிகளில் தனித் தனியாக விருதுகள் வழங்கப்பட்டன.

அதுதவிர இலங்கை இசைத்துறையை மிளரச் செய்த பன்னிரெண்டு மூத்த இசைக்கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தமிழில் சின்னதம்பி பத்மலிங்கம் அவர்களுக்கு டி.எஸ். மனிபாஹகவதர் ஞாபகார்த்த விருதும் மூத்த இசைக் கலைஞரான எம்.எஸ். செல்வராஜா ஆகியோருக்கும் விசேட கௌரவ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.