மனித தன்மை இன்மையினாலேயே, அநாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் பல்கி பெருகுகின்றன.


(துறையூர் தாஸன்)

குழந்தை பருவமும் வயது முதிர்ந்த பருவமுமே மிக முக்கியமான பருவமாகும். இப்பருவம் இரண்டிலுமே போதியளவு கவனிப்பு, பராமரிப்பு தேவப்படுகின்றது. இவ்விரு பருவத்தினருமே சமகாலமாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு அதிகளவு உட்படுத்தப்படுள்ளனர் என நாவிதன்வெளி பிரதேச செயலக செயலாளர் சோ.ரங்கநாதன் தெரிவித்தார்.

சிறுவர், முதியோர் தினம் மற்றும் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நாவிதன்வெளிப் பிரதேச செயலகம் உலக தரிசன நிறுவனத்துடன் இணைந்து நடத்திய சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,குழந்தைகளுக்கும் இளஞ்சிறார்களுக்கும் கிடைக்கின்ற முறையான அன்பும் நல்ல வழிப்படுத்தல்களும் தான் பிற்காலத்தில் அவர்களை சிறந்த நிலைக்கு இட்டுச்செல்கின்றது.நாளைய தலைவர்களை சிறந்த முறையில்  இன்றே உருவாக்க வேண்டும்.

சிறுவர்கள் தொடர்பான பெரியவர்களின் எதிர்பார்ப்பு கல்வி கற்று உயர் உத்தியோகங்களை பெற்று பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்ற  விடயங்களை இளம் பருவத்திலிருந்து கூறுகின்றோமே தவிர மனிதப் பண்புகள் வளர்த்துக்கொள்வதற்குத் தேவையான அடிப்படை விடயங்களை கற்றுக்கொடுக்காததனால், குடும்பங்களுக்கிடையிலான பல்வேறுபட்ட குடும்ப பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள், சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் உரிமை மீறல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உருவாக காரணமாகின்றது.

கூடுதலான பெற்றோர்கள்,உயர் தொழிலில் இருக்கின்ற தங்களது பிள்ளைகளிடமிருந்துதான் தாபரிப்பு கேட்பவர்களாகவுள்ளனர்.உயர் தொழில் பெறுகின்ற குடும்பங்களில் இருந்தே பெரும்பாலான முதியோர்கள்,முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய முதியோர் செயலகம் அண்மையில் அறிக்கை விட்டிருந்தது.

நல்ல மனிதப் பண்புகள் இல்லாத சமூகத்தில் இவ்வாறான பிரச்சினைகள் கூடுதலாக எழுகின்றது.மனிதத் தன்மையுள்ள சிறந்த சந்ததிகளை உருவாக்கத் தவறி விட்டதனாலேயே இன்று அநாதை இல்லங்கள்,முதியோர் இல்லங்கள் பல்கி பெருகிக் கொண்டு இருக்கின்றது.இந்நிலை மாறவேண்டும்.மாற்றம் எம் ஒவ்வொருவரிலும் இருந்து வரும்போதுதான் அது உண்மையான சிறந்த மாற்றமாக இருக்கும் என்றார்.