மட்டக்களப்பு உட்பட பல பிரதேசங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை பொதுமக்களுக்கான எச்சரிக்கை!


எதிர்வரும் 20ம் திகதி வரை நாட்டில் மற்றும் நாட்டை சுற்றிய கடற்பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

விசேடமாக மத்திய , சப்ரகமுவ , தென் , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் இன்று பிற்பகல் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக புத்தளம் தொடக்கம் கொழும்பு , காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்.

அதேபோல் , இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பயங்கர மின்னல் ஏற்படும் கூடும் எனவும் , 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக , மலைப்பிரதேசங்கள் மற்றும் ஆற்றோரங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , கடற்றொழிலில் ஈடுபடும் நபர்கள் கடும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்று காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

மேலும் , இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் போது பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அந்த நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.