மட்டக்களப்பில் தொழிற்பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவாக்ளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடகாலமாக இளைஞர் மற்றும் யுவதிகளின் எதிர்கால தொழிற்சவால்களுக்கு ஏற்ற வகையில் தொழிற் சந்தையில் சவால்மிக்க பல தொழிற்பயிற்சிகளை வழங்குவதில் முன்னணியாகத் திகழும் EREEDO தொழிற்பயிற்சி நிறுவனத்தின் கடந்த வருடம் கையடக்க தொலைபேசி திருத்துனர் , உதவித்தாதியர் மற்று கணணி உதவியாளர் போன்ற தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் வைபவமானது  31.05.2018 வியாழக்கிழமை, மட்டக்களப்பு மன்றேசா வீதியில் அமைந்துள்ள EREEDO தொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது EREEDO தொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஸ்தாபகரும், பணிப்பாளருமாகிய திரு.த.மயூரன் தலைமையில் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியதுடன், இந்நிகழ்வில் பிரமத விருந்தினராக கிழக்கு மாகாணசபையின் முன்னால் பிரதி தவிசாளர் கௌரவ.திரு.பிரசன்னா இந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டதுடன்,

சிறப்பு அதிதிகளாக World Vision Lanka நிறுவனத்தின் திருகோணமலை மாவட்டத்தின் முகாமையாளர், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மற்றும் வாகரை அலுவலகத்தின் முகாமையாளர், AMCOR நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்கள், Ocean Stars Lanka நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் ஆகியோரும்  ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் முக்கிய சிறப்பு அம்சமாக, EREEDO தொழிற்பயிற்சி நிறுவனம் மூலமாக தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்து தற்போது அதே துறையில் தொழில்களை மேற்கொள்ளும் மாணவர்கள் அடுத்த சந்ததியினருக்கு பயிற்சிநெறி மூலமாக பெற்ற நன்மைகள், அதன் மூலம் தமது வாழ்வாதாரத்தை பயனுள்ள வகையில் வடிவமைத்தமை போன்ற வழிகாட்டல் ரீதியான முக்கிய விடயங்களை, அனுபவப் பகிர்வுகளாக பகிர்ந்து கொண்டமையும் அத்துடன் உதவித்தாதியர் பயிற்சிநெறியை நிறைவுசெய்த மாணவர்களால் தாதிய சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.