மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பு ! பாடசாலைகள்,அரச திணைக்களங்கள்,வங்கிகள் ஸ்தம்பிதம் !



(க. விஜயரெத்தினம், சிவம், சசி )
புல்லுமலை குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் இன்று வெள்ளிக்கிழமை(7.9.2018) அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த பூரண ஹர்த்தால் அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.

ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கைமுற்றாக பாதிக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
ஹர்த்தாலுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் போக்குவரத்துச்சேவை முற்றாக முடங்கியுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் அதில் பயணிப்போரின் அளவு மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது.எனினும் தூர இடங்களுக்கான ஒரு சில போக்குவரத்துகள் நடைபெற்றுவருகின்றன.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாத காரணத்தினால் கல்வி நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் பாடசாலைகள் வெறிச்சோடிக்கிடப்பதை காணமுடிகின்றது.

அரச அலுவலகங்கள் இயங்குகின்றபோதிலும் அங்கு மக்கள் செல்லாத காரணத்தினால் அலுவலகங்கள் வெறுமையாக காணப்படுகின்றன.
இன்று காலை சில பகுதிகளில் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்துகளை தடைசெய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினால் அப்பகுதி மக்கள் எதிர்காலத்தில் பாரிய வறட்சியை எதிர்நோக்கப்படும் என்ற காரணத்தினால் அதனை தடுத்து நிறுத்துமாறு கடந்த காலத்தில் பல போராட்டங்கள் நடாத்தப்பட்ட நிலையில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த குடிநீர் தொழிற்சாலையினை நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.பல்லின சமூகங்கள் வாழும் நாட்டிலே தனியொரு சமூகத்தினரின் அரசியல் செயற்பாட்டுக்கும்,அபிவிருத்திக்கும் ஜனாதிபதி, பிரதமர் கருணைகாட்டுவது தவிக்கப்படவேண்டும் என்பதே இன்றைய ஹர்த்தாலின் நோக்கமாகும்.இவ் ஹர்த்தாலானது தமிழ்மக்களினதும்,தமிழ் உணர்வாளர்களினதும் ஆதரவுடன் நடைபெறுகின்றது.