பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கோரிக்கைக்கு அமைய மீண்டும் மட்டக்களப்பு விமான சேவை ஆரம்பம்


இரத்மலானையிலிருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போதே, இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தின் போது அண்மையில் பாலையடிவட்டை கிராமத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட போது, அங்குள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கையை முன்னிட்டு, தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக 12 பேர்ச் காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இது போதுமானதல்ல என சுட்டிக்காட்டியதையடுத்து, முழு காணியையும் விடுவிப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் காணியிலும் இராணுவ முகாம் அமைந்துள்ள நிலையில், அதன் ஒரு பகுதி இதுவரை விடுவிக்கப்படாதுள்ளதாக சாணக்கியன் தெரிவித்தார். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அந்த காணியை விடுவிக்க முடியுமா என்பது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெவுளியாமடு பகுதியில் வனபரிபாலனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கு காணி வழங்குமாறு கோரப்பட்டுள்ளமை தொடர்பிலும் மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு விமான நிலைய வீதியை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கும் அறிவித்தலை மட்டக்களப்பு விமானப்படையினருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள காலங்களில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோடமேடு கிராமம், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமம், கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரம்படித்தீவு மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பண்டாரியாவெளி ஆகிய கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு, வீடுகள் நீரில் மூழ்குவதால் மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர் என சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

இந்த கிராமங்களில் உயரமான மாடிக் கட்டிடங்கள் இல்லாததே இந்நிலைக்கு காரணம் என குறிப்பிட்ட அவர், அவ்வாறான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறு அதிகாரிகளிடம் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அண்மையில் தித்வா புயலால் பயிர்செய்கை பாதிக்கப்பட்ட காயான்கேணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாக மக்கள் முறையிட்டிருந்த நிலையில், குறித்த இழப்பீட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆனைகட்டியவெளி கிராமத்தில் உள்ள சமுளயடிவட்டை வீதி 2024 ஆம் ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை புனரமைக்கப்படவில்லை என கூட்டத்தின் போது சாணக்கியன் எடுத்துரைத்தார்.

அந்த வீதியையும், ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட வெலிக்கந்தை ஊடாக வடமுனைக்கு செல்லும் பாதையையும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனுடன், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில், எத்தனை விமான போக்குவரத்துகள் இடம்பெற்றால் மக்களுக்கு பயனளிக்கும் என்பதனை மீளாய்வு செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி சாணக்கியன் இராசமாணிக்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அனைத்து விடயங்களும் தொடர்பாக அடுத்த பாதுகாப்பு அமைச்சு ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.