வெள்ள நீரைக் கட்டுப்படுத்த வடிகான்களில் அடைக்கப்பட்டிருந்த கழிவுகள் அகற்றும் பணிகள்


(சிவம்)

மட்டக்களப்பு ஜி.வி. வைத்தியசாலை, மருத்துவ பீடம் மற்றும் சென் செபஸ்தியார் தேவாலய அருகில் உள்ள வடிகான்களில் அடைக்கப்பட்டிருந்த கழிவுகள் இன்று (13) அகற்றப்பட்டதோடு வடிகானை அண்டிய புற்கள் மற்றும் செடிகள் கத்தரிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதனின் முயற்சியினால் கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். சகாதேவனின் வழிகாட்டலில் சுகாதாரத் தொழிலாளர்களினால் குறித்த துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன.

குறித்த வடிகானில் தேங்கியிருந்த நீரினுள் காணப்பட்ட பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகள், காகிதங்கள், துணிகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் அகற்றப்பட்டு மாநகர கழிவகற்றல் வாகனத்தினால் அகற்றப்பட்டன.

பிரத்தியேக வைத்தியசாலையின் கழிவுகள் நேரடியாக கானினுள் விடப்பட்டமை கண்டபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கானின் ஊடாக சத்திர சிகிட்சைக்குப் பயன்படுத்தும் பிளேட்கள், ஊசிகள், சிறுஞ்சிகள் உள்ளிட்ட பல்வேறு களிவுகள் கானினுள் விடப்பட்டு வடிகான் நீரோட்டமின்றி அடைக்கப்பட்டிருந்தன.

உயர் கல்வித் தகைமைகளைக் கொண்ட கல்விமான்களே சட்டத்ததை மீறும் செயல்களைச் செய்யும் போது சாதாரண மக்களை எவ்வாறு குறை காண்பது. சட்டமானது பட்டம், பதவி மற்றும் அந்தஸ்து பார்ப்பதில்லை.

இதில் மன வேதனைக்குரிய விடயம் கடந்த 2 வருடத்திற்கு முன்பு மாநகரசபையின் சுகாதாரத் தொழிலாளி ஒருவர் கழிவுகளை அகற்றும்போது பொது வைத்தியசாலையில் நோயாளியின் சிகிட்சைக்குப் பயன்படுத்திய ஊசியின் நுனியில் இருந்த மருந்தானது அவரது காலில் குற்றியதும் அம்மருந்தின் தொற்றினால் குறித்த தொழிலாளியின் கால் வீக்கமடைந்து இதுவரையும் நடக்கமுடியாத பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.