கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது


கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம் மூடப்பட மாட்டாது; அமைச்சர் சம்பிக்க உறுதி..!

கல்முனையில் இயங்கி வருகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகத்தை மூடிவிட்டு, அதன் பணிகளை அம்பாறையில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்துடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை கைவிடப்பட்டு, கல்முனை உப அலுவலகம் தொடர்ந்தும் இயங்கும் என பெருநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உறுதியளித்துள்ளார்.

கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தை மூடுவதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கையை கைவிடுமாறும் அதனை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்குமாறும் கோரி கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருந்ததுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அரச தொழில் முயற்சிகள், கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஹக்கீம், பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை நேற்று மாலை அவசரமாக சந்தித்து இவ்விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. 

இதன்போது கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபை உப அலுவலகத்தை மூடுவதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு அவர்கள் பலத்த ஆட்சேபனையை தெரிவித்ததுடன் கல்முனைப் பிராந்திய மக்களின் நலன் கருதி அவ்வலுவலகம் தொடர்ந்தும் கல்முனையில் இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு அமைச்சர் சம்பிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம் ஒருபோதும் மூடப்படமாட்டாது எனவும் அது அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கிய கல்முனைப் பிராந்திய காரியாலயமாக தொடர்ந்தும் நிரந்தரமாக இயங்கும் எனவும் இது தொடர்பான பணிப்புரைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதன்போது உத்தரவாதம் வழங்கியுள்ளார்.