கிழக்கு மாகாணத்தின் ஊடாகவே அதிகளவில் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் வருகின்றன: ஜனாதிபதிமட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய அபிவிருத்தி திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றன.

நிகழ்வில் சத்துருகொண்டான் கிராமம் உற்பத்தி கிராமமாக தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, புத்தளம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக தாம் தெரிவு செய்ததாகவும், இம்மாவட்டங்களில் சேவையாற்ற அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இல்லாமையே அதற்கான காரணம் எனவும் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பின் கிராமங்களில் 842 திட்டங்கள் கடந்த சில தினங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், கிழக்கு மாகாணத்தின் ஊடாக கடல் மார்க்கமாகவே அதிகளவில் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவற்றை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை எனவும் கேட்டுக்கொண்டார்.