புகைத்தலினால் வாரத்தில் 400 பேர் உயிரிழப்பு

இலங்கையில் புகைத்தலினால் வாரமொன்றுக்கு சுமார் 400 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமானம் பெறுபவர்களாவர்.

தற்பொழுது புகைத்தலினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வாகன விபத்து, தற்கொலை, எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கையிலும் பார்க்க கூடுதலானதாகும் என்றும் அமைச்சர் கூறினார். சிகரெட்டுகளுக்காக உலகில் ஆகக்கூடுதலான வரியை அறவிடும் நாடு இலங்கையாகும்.

இது 95 சதவீதமாகும் என்றும் அவர் கூறினார். புகைத்தலால் உயிரிழக்கும் மற்றும் நோய்களுக்கு உள்ளாகும் நபர்களுக்காக சுமார் 300 பில்லியன் ரூபா வருடாந்தம் செலவிடப்படுகின்றது. இருப்பினும், வரியின் மூலம் வருடாந்தம் கிடைக்கும் பணத்தின் தொகை 80 பில்லியன் ரூபா என்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.