Saturday, May 18, 2019

இன்றுடன் போர் முடிந்து பத்து வருடங்கள்.. இதுவரை நடந்தது என்ன?

ads


ஆர்.சயனொளிபவன் & TEAM  

18.05.2009 - 18.05.2019 
 • பத்து வருடங்கள் கடந்தும் போர் குற்ற விசாரணை அற்ற நிலை
 • காணாமல் போனவர்களின் நிலை கதையாக மாறிடுமோ
 • சிறையில் தொடர்ந்தும் வாடும் அரசியல் கைதிகள்
 • முஸ்லீம் அடிப்படை வாதத்தால் மீண்டும் போர் காலத்தை நோக்கி செல்லும் இலங்கை
 • கிழக்கில் அதிருப்தியுடன் வாழும் தமிழ் சமூகம்
 • 10 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி
 • அரசியல் தீர்வுக்கான போராட்டம் அர்த்தமற்று போகும் நிலை
 • அபிவிருத்தியை மையப்படுத்தி செல்ல முற்படும் தமிழ் சமூகம்
 • தமிழ் தலைமைகள் இனியாவது யதார்த்தபூர்வமாக இயங்குமா

பொதுவாக ஒருநாட்டில் போர் நடைபெற்று முடிவிற்கு வந்தால் அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றினைத்து நாட்டை முன் நோக்கி கொண்டு செல்வதற்கான நேர்மையானதும் நம்பிக்கை தரக்கூடியதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அதிகமான நாடுகளில் காணலாம். ஆனால் எமது நாட்டில் எந்த அளவிற்கு அம் முயற்சிகளுக்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டது என்று பார்ப்போமானால் அப்படிபட்ட செயற்பாடு ஒன்றுமே இடம்பெறவில்லை என்று தான் கூறவேண்டும்.


போர் முடிவிற்கு வந்த முதல் நாளில் இருந்தே முற்றிலும் மாறாக போர் வெற்றியை கொண்டாடும் முகமாக பெரும் எடுப்பிலான கொண்டாட்டங்கள் அதிலும் காலிமுகத்திடலில் பெருந் தொகையான பாதுகாப்பு படையை உள்ளடக்கிய வகையில் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட முறை இன்றும் எமது மனதில் ஆழமாக பதிந்துள்ளதே எமது நினைவிற்கு வருகின்றது. மிக முக்கியமான பார்க்க வேண்டிய விடயங்கள் என்ன என்றால்
 • போரோ ஒரு நாட்டிற்குள் தான்
 • போரை நடத்தியதோ அந்த நாட்டு அரசாங்கம், போரோ நாட்டிலுள்ள ஒரு பகுதி மக்களுக்கு எதிராக.
 • போர் வெற்றியின் தோற்றப்பாடோ, இன்னொரு நாட்டுக்கு எதிராக நடைபெற்ற போர் போன்றும் .
 • போரின் பின் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வன்னி பகுதியை சேர்ந்த அப்பாவி பொது மக்களை மந்தைகள் போல் பல முகாம்களில், பல வருடங்கள் அடைத்து வைக்கப்பட்டதும். இவர்களின் விடிவோ நவநீதம்பிள்ளை அவர்களின் கையில் இருந்ததையும் (ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனிதஉரிமை ஆணையாளர்)
மேலும் அத்தோடு அவ்வேளை நாட்டின் தலைவராக இருந்த தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் போர் வெற்றி பேச்சோ அல்லது அதற்கு பின் நிகழ்த்திய எப் பேச்சுமோ
 • நாட்டில் உள்ள சகல இன மக்களும் ஒரு நாட்டு மக்கள் என்றோ பழையன யாவையும் மறந்து நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒரு தாய் மக்கள் போல இணைந்து செயற்படுவோம் என்ற வார்த்தைகள் பிரயோகிக்க பட்ட தன்மைகள் அறவே இல்லை என்றுதான் குறிப்பிட வேண்டும்.
 • மாறாக நாடோ பௌத்த சிங்கள மக்களுக்கு உரிய நாடு போலும் சிறுபான்மை மக்களின் எதிர்காலமும் நீண்ட இருண்ட நாட்களாகவும் அமையப்போவது போலும் இருந்தது .
முடிசூடா மன்னனாக இருக்கவேண்டிய இவருடைய ஆட்சியோ ஐந்து வருடங்களுக்கு மேல் நீடிக்கவும் இல்லை முக்கியமாக இதே சிறுபான்மை மக்களின் வாக்கின் பலத்தால் இவருடைய ஆட்சியோ முடிவிற்கு கொண்டுவரப்பட்டது

போரின் இறுதிக்காலத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் உலகின் மனிதநேயத்திற்கே சவாலாக அமையக்கூடிய வகையில் நடைபெற்ற போர் குற்றங்கள் என்று கருத்தக்கூடியவகையில் இடம் பெற்ற நாகரிக உலகிற்கு மேலும் பெரும் சவாலாக அமைந்த வகையிலும் இடம்பெற்றதாக கூறப்படும் நிகழ்வுகழும் , அவற்றுள் சில

 • விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 14 வயதுடைய பாலச்சந்திரனின் படுகொலை
 • வெள்ளை கொடி விவகார படுகொலைகள் இவற்றுள் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன், அவருடைய துணைவியார் , புலித்தேவன் உட்பட பெரும் தொகையானோர் வெள்ளைக்கொடியுடன் சென்று சரணடைந்த போதும் கொலை செய்யப்பட்டமை
 • புலிகளின் ஊடகத்துறை ஒளிபரப்பாளர் இசைப்பிரியாவின் கற்பழிப்பு மற்றும் படுகொலை
 • சரணடைந்த புலிகளின் தலைவர்கள் மற்றும் போராளிகள் படுகொலைகள் இவற்றை உறுதிப்படுத்த கூடிய வகையிலான காணொளிகள், அவை தொடர்பான விசாரணைகள்
 • உலக போர் விதி முறைகளுக்கு முரணான முறையில் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் குண்டுவீச்சுகள் அதன் விளைவாக 30,000 ( ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின் படி) வரையிலான உயிரிழப்புகள்
இப்படி நீண்ட வரிசையில் அடுக்கி கொண்டே போகலாம் இவை அவற்றுள் சிலவே

ஆனால் கடந்த ஒன்பது வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான சபையும் மற்றும் தமிழர் தரப்பும் ஒரு முறையான நீதித்துறை கட்டமைப்பின்னுடாக, பக்கச்சார்பற்ற முறையில் உலக நீதியாளர்களை உள்ளடக்கிய வகையிலான ஒரு நீதி மன்றத்தினுடாக போர் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அனைத்து முறைபாடுகளும் விசாரிக்கப்படவேண்டும் என்று பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற போதும் இன்று வரை பயனளிக்காத முயற்சியாகவே காணப்படுகின்றது.

ஏனெனில் மறுபக்கத்தில் இலங்கை அரசோ பெருமளவிலான பண மனிதவளத்தை பயன்படுத்தியும் இதற்கு மேலாக ராஜதந்திர தொடர்புகளை பிரயோகித்தும் இப்படிப்பட்ட போர் விதிகள் மீறிய சம்பவங்கள் நடைபெறவில்லை என்றும் அப்படித்தான் ஒரு நீதி விசாரணை நடத்தப்படவேண்டுமானால் அவை இலங்கையில் உள்ள நீதி துறையின் ஊடாகத்தான் நடாத்தபடும் என்றும் காலத்தை இழுத்தடிக்கும் முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது.

காலமோ பத்து வருடங்கள் கடக்கும் இவ்வேளையில் இன்று வரை ஆக்கபூர்மாக நடந்ததோ ஒன்றுமில்லை என்று தான் கூறவேண்டும்

காணாமல் போனோரின் நிலை   


போர்காலத்திலும், போரின் இறுதியிலும் மேலும் முக்கியமாக போரின் பின்பும் வெள்ளை வேன் மூலம் கடத்தல்கள் , கைதுகள் மூலமும், காணாமல் ஆக்கப்பட்டமையும், இவை அவற்றுள் சிலவே

 • அந்நாள் கிழக்கு பல்கலைக்கழகத்தின்  உபவேந்தராக இருந்த கலாநிதி எஸ்.ரவீந்திரநாத் இவர் கொழும்பின் மையப்பகுதியில் இருந்து காணாமல் போனமையும்
 • பல தமிழ் கோடீஸ்வரர்கள் கொழும்பின் மையப்பகுதியில் இருந்து கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்ட நிலையில் காணாமல் போனமையும்
 • அவ்வேளையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நியாயதிற்கு குரல் கொடுத்தவர்கள் கைதாகி காணாமல் போனமையும்
 • அரச ஒட்டு குழுக்களால் வெவ்வேறு காரணங்களுக்காக கடத்தப்பட்டு காணாமல் போனமையும்
 • விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்று கருத்தப்பட்டவர்கள் கைதாகி காணாமல் போனமையும்
என்ற வரிசையில் பல நுற்றுக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 
 • இவர்களை தேடியும் இவர்கள் எங்கு உள்ளார்கள் என்று ஒரு தொகுதி உறவினர்களும்,
 • காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி மற்றும் ஒரு தொகுதி மக்களும் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களையும்
 • மேலும் ஒரு தொகுதி மக்கள் நீதி கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை வரை சென்றும் முயற்சிகளை மேற்கொண்டுவரும்
இவ்வேளையில் பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் . அதேவேளை இதுவரை இவை யாவும் பயனளிக்காத முயற்சியாகவும், மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளோ அவர்களுடைய முயற்சிகளை கைவிடாது தொடர்ந்த வண்ணமுமே உள்ளனர்.

அரசியல் கைதிகளாக சிறையில் வாடும்

பெரும்பாலான அரசியல் சிறைக்கைதிகள் பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வாடுபவர்களின் எண்ணிக்கை தற்போது 111 ஆக உள்ளது. இவர்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் பல முறை தங்களுக்கு எதிரான குற்றாச்சாட்டுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள் அல்லது எங்களை விடுதலை செய்யுங்கள் மற்றும் நாங்கள் செய்யாத குற்றச்சாட்டிற்காக சிறைவாசம் அனுபவித்து வருகின்றோம் என்று கூறி சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்தும் அவர்களின் நிலை கவலைக்கிடமாகும் காலகட்டங்களில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் கைவிடப்படுவதும் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக அண்மைவதை கடந்த காலங்களில் காணக்கூடியதாகவும் உள்ளது.

தமிழ் மக்களிடையே உள்ள பெரும் அதிருப்தி என்னவெனில் முக்கியமாக நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகு எலும்பாக இருந்தும் இவர்களுடைய நியாயபூர்வமான கோரிக்கைக்கு நீதி கிடைக்காமல் போனதேயாகும்.

மீண்டும் போர் காலத்திற்கு கொண்டு செல்ல முற்படும் முஸ்லீம் அடிப்படைவாதம்


இலங்கையில் போர் முடிவிற்கு வந்து பத்து வருடகாலத்தை அண்மித்த வேளையில் ஒரு குழு தம்மை முஸ்லீம் அடிப்படை வாதிகள் என்று கூறிக்கொண்டு தமது மதத்திற்காக உயிர்த்த ஞாயிறு அன்றும் அதனைத்தொடர்ந்தும் தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொண்டும் , அதிலும் உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் தாக்குதலுக்கு உரிய இடம்களாக தெரிவுசெய்தும் முக்கியமாக அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்தும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் பெரும்தொகையான குழந்தைகள் உட்பட 250 மேற்பட்டோர் பலியாகியும் மற்றும் 500 ற்கு மேற்பட்டோர் படுகாயமும் அடைந்துள்ளனர்.

இத் தாக்குதலை தொடர்ந்து பெரும் தொகையான வெடிபொருட்கள், வெடிபொருட்களை தயார்படுத்துவதற்கான மூலப்பொருட்கள், தற்போதுவரை 250 பேர் வரை கைது, பல மறைவிடங்கள் என சந்தேகிக்கப்படும் இடங்கள் கண்டுபிடிப்பு, பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் என தாக்குதலுடன் தொடர்புள்ள காரணிகள் நீண்டு கொண்டே செல்லுகின்றன.

மறுபுறத்தில் தொடரும் ஊரடங்கு சட்டங்கள், சுற்றிவளைப்பு சோதனைகள், வீதி சோதனைகள் என இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கக்கூடிய வகையிலும் மற்றும் அடுத்ததாக ஏதும் நடந்து விடுமோ என்ற பீதியில் தமது வாழ்க்கையை தொடரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பொதுமக்களும், . மேலும் முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் அதிலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் அதிகமான முஸ்லீம் அடிப்படைவாதம் தொடர்பான கைதுகள் மற்றும் இச்செயலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்கள், கண்டுபிடிக்கப்பட்டதாலும் கெடுபிடிகளும் அதிகமாகியுள்ளது இதனால் இப் பகுதியில் கடந்த பல வருடம்களாக நிலவிய இயல்பு நிலையை தற்போது முற்றாக இழந்துள்ள நிலைமையே காணப்படுகின்றது 

மேலும் அண்மைய நாட்களில் நாடளாவிய ரீதியில் ஆங்காங்கே முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மீண்டும் நாட்டையே பெரும் ஸ்தம்பிதம் மற்றும் நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் நல்லாட்சியில் இறுதியாக இருந்த ஒரே ஒரு நன்மையான நிம்மதியும் அற்று போயுள்ளது . மேலும் நாடு பத்து வருடங்களுக்கு பின் நோக்கி முன்பிருந்த போர் கால நிலைக்கு சென்றுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.

அதிருப்தி அடையும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள்

நல்லாட்சி அரசு பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் வேளையில் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அதிருப்தியின் அளவும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாகவே காணப்படுகின்றது. கடந்த 30 வருட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எடுத்துப்பார்ப்போமேயானால் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு உறுப்பினரின் ஒன்றரை வருடங்கள் தவிர மற்றைய 100%மும் தமிழ் தேசிய கூட்டமைபை சேர்ந்த உறுப்பினர்களையே இப் பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்துள்ளனர் 

இப் பெரும் சாதனையானது வடக்கிலும் இல்லாத அளவிற்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் தமிழ் தேசியத்திற்க்காண அர்ப்பணிப்பை எடுத்து காட்டுகின்றது. மேலும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வடக்கில் இருப்பதை போல் அல்லாமல் பல வேறுபட்ட சமூக மக்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாலும் இப் பாரிய அற்பணிப்பால் பெரும் பின்னடைவுகளை கல்வி பொருளாதாரம், சுகாதார துறை, மற்றும் நவீனமயப்படுத்தப்படாத அடிப்படை கட்டுமானத்துறை போன்ற பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத துறைகளில் நீண்டகாலமாக அபிவிருத்தி இல்லாத தன்மையையும் பிரதியுபகாரமாக பெற்றுள்ளனர். இதன் காரணமாக தொடர்ந்து ஏற்பட்ட எதிர் மறையான விளைவுகளாலும், இன்று கிழக்கின் தமிழ் பகுதிகளில் உள்ள பௌதீக வளமும் தமிழ் மக்களும் இஸ்ரேலில் உள்ள பலஸ்தீன பகுதிகள் போன்று தோற்றமளிக்கின்றது. மேலும் இந்நிலைக்கு முக்கிய காரணிகளான சிலவற்றை பார்ப்போம்

கல்வியின் நிலை
கஞ்சிகுடிச்சாறு  
நீண்ட போரின் தாக்கம் தமிழ் பகுதிகளில் கல்வியில் ஏற்பட்ட பெரும் பின்னடைவை தெளிவாக புலப்படுத்துகின்றது. முக்கியமாக கிழக்கு மாகாணம் மாகாண மட்டத்தில் 9 மாகாணங்களிலும் 9 வது நிலையில் இருப்பதும் இதற்கு சான்றாக உள்ளது. போர் காலத்தில் 40% மேற்பட்ட தமிழர்கள் வாழும் பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் போர் முடிவிற்கு வந்து 10 வருடங்கள் கடக்கும் காலகட்டத்திலும்
 • கணித, விஞ்ஞான ஆங்கில ஆசிரியர்களுக்கான பாரிய அளவிலான தட்டுப்பாடு இன்றும் முக்கியமாக திருகோணமலை வலயத்தில் நிலாவெளி குச்சவெளி பகுதி, மூதூர் வலயத்தில் சேனையூர் சம்பூர் கிளிவெட்டி ஈச்சிலம்பற்று பகுதி , கல்குடா வலயம் வாகரை கோட்டம் , மட்டக்களப்பு மேற்கு வலயம் முற்றாக , பட்டிருப்பு வலயம் வெல்லாவெளி கோட்டம், சம்மாந்துறை வலயம் நாவிதன்வெளி கோட்டம், திருக்கோவில் வலயம் அக்கரைப்பற்று தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காணப்படுகின்றது.
 • கல்வி பொதுத்தராதர உயர்தரம் கணித விஞ்ஞான தொழில்நுட்ப துறைகளில் தமிழ் மாணவர்கள் கற்பதற்கு உரிய 1AB பாடசாலைகள் மேற்குறிப்பிட்ட வலயங்களில் ஒரு சில இடங்களிலேதான் காணப்படுவதாலும். இதே நிலை மேற்குறிப்பிட்ட வலயங்களில் மேலும் பல வருடங்கள் தொடர்வதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகமாகவும் காணப்படுகின்றன.
 • மேலும் இக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஆசிரியர் குலாம் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கற்பிப்பதாலும் மேலும் தற்போதைய சூழலில் இவர்களின் வருகையே கேள்விக்குறியாகிய நிலையில் உள்ளதால் மேலும் நீண்டகாலத்திற்கு இப் பகுதி மாணவர்களின் கல்வியில் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
 • மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கட்டிட வளம் மிகவும் அடிமட்ட நிலையிலேயே காணப்படுவதன்னாலும் மாணவர்கள் கல்வி கற்பதற்கான இயல்பு நிலை அற்ற சூழலுமே காணப்படுகின்றது.
ஆனால் கிழக்கில் உள்ள மற்றைய சமூகங்கள் வாழும் பகுதிகளிலோ ஆசிரியர் வளமோ பௌதீக வளமோ மேலதிகமாக காணப்படுகின்ற நிலையே நிலவுகின்றது . மேலும் இப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் நீண்ட போரின் பெரும் தாக்கத்தாலும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் இருப்பதாலும் மூன்று நேர வேலை ஆகாரமே திண்டாட்டமாக உள்ள நிலையில் தங்களுடைய பிள்ளைகளை நகர்ப்பகுதியிற்கு அனுப்பி படிப்பது என்பது இயலாதகாரியமாகவுள்ளது. மேலும் இந் நிலை தொடருமாயின் கல்வியில் இவ் அவல நிலையும் மேலும் ஒரு பத்து வருடத்திற்கு தொடர்வதற்குரிய சாத்தியக்கூறுகளே அதிகமாக காணப்படுகின்றது.

பொருளாதாரத்தின் நிலை
பொருளாதாரத்தை எடுத்துக்கொள்வோமேயானால் பெருமளவு இயற்கை வளங்களான நீர் வளம், நில வளம் மற்றும் கடல் வளம் கொண்ட கிழக்கு மாகாணம் பொருளாதார ரீதியா கீழ் நிலையில் இருப்பதையும். மற்றும் தமிழ் மக்கள் 74% வாழும் மட்டக்களப்பு மாவட்டம் வறுமை சுட்டேன் அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் 25 ஆக காணப்படுவதும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் இன்றய நிலமையை காட்டுகின்றது. போர் காலத்தில் கிழக்கில் 50% அளவிலான நிலப்பகுதிகள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாலும் மேலும் இக் கட்டுப்பாட்டு பகுதிகளில் 100% மும் தமிழ் மக்களே வாழ்ந்ததாலும், போர் காலத்தில் அதாவது 20 வருடகால்பகுதியில் இப் பகுதிகளில் போர் கால அடிப்படையில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாலும் இதனை விட இப் பகுதிகளில் இயங்கிவந்த பல தொழிற்ச்சாலைகள் மூடப்பட்டும் அந்த வகையில் மூடப்பட்ட தொழில் சாலைகள் என்றவரிசையில்
 • வாழைச்சேனை காகித அலை
 • கிரான் பாரிய நெல் ஆலை முதல் தமிழர் பகுதிகளில் மூடப்பட்டுள்ள 20ற்கும் மேற்பட்ட நெல் அரிசி அலைகள்
 • மண்டூர் மற்றும் கொடுவமாடு ஒட்டு தொழிற்சாலைகள்
இவற்றுள் முக்கியமாக வாழைச்சேனை காகித ஆலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5,000 பேர் வரை வேலை வாய்ப்பை பெற்றிருந்தனர்.

மேலும்
 • அடிமட்ட நிலையில் இருக்கும் பால் சேகரிக்கும் நிலையங்கள் -
 • புனரமைக்கப்படாமல் அல்லது மழை நீரை நவீன முறையில் சேகரித்து வைக்கக்கூடிய வகையில் குளங்கள் புனரமைக்க படாமை
 • இறால் வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன் பிடி மற்றும் மீன் பிடி துறைகளில் அபிவிருத்தி அற்ற தன்மை
 • போரினால் அழிக்கப்பட்ட கிராமிய தனவந்தர்கள் ‘போடி மார்கள்’
 • சிறுகைத்தொழில் பேட்டைகள் புனருத்தாரணம் அற்ற நிலை
 • இவற்றுக்கு மேலாக தற்போது முஸ்லீம் அடிப்படை வாதத்தால் புரையோடியுள்ள கிழக்கு சுற்றுலா துறை
 • அடிப்படை கட்டுமானப்பணிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பிரதேச வைத்திய சாலைகள்
 • செயல் திறன் அற்ற நிலையில் உள்ள கமநல நிலையங்கள்

என்று ஒரு நீண்ட வரிசையே உள்ளது மேலும் இத் துறைகள் புனருத்தாரணத்திற்கும் முதலீட்டிற்கும் அவசர நிதியை எதிர்பார்த்து நிற்கின்றன. இந்நிலை தொடருமானால் இப்பகுதிகளில் இருந்து ஒரு உறுதியானதும் வலு சேர்க்கக்கூடியதுமான சமுதாய உருவாக்கம் என்பது மிக நீண்ட தொலைவில் உள்ளது என்பதை தெளிவுபடுத்துகின்றது. . மேலும் போரின் வடு இம்மக்களை விட்டு அகல இன்னும் எத்தனை வருடங்கள் செல்லுமோ என்பதும் விடை இல்லாத கேள்வியாகவே உள்ளது.10 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி
கிண்ணியா பாலம் 
இலங்கையில் போரிற்கு பின்பு துரித கதியில் பரவலாக புனருத்தாரணம் செய்யப்பட்ட பெரும்தெருக்கள் என்றவகையில் வடக்கு கிழக்கும் எந்த ஒரு வேறுபாடும் இன்றி செப்பனிடப்பட்டுள்ளது . இவற்றிக்கு மேலாக கிழக்கில் பல இடம்களில் நிலப்பகுதிகளை இணைக்கும் பாரிய பாலம்கள்

 • நவீனமுறையில் மீள் நிர்மாணிக்கப்பட்டமையும்
 • இலங்கையின் சரித்திரத்தில் திருகோணமலை மட்டக்களப்பு கரையோர நெடும்சாலை பாரிய பல புதிய பாலம்கள் மூலமும் அவற்றுள் குறிப்பிட தக்க கிண்ணியா பாலம் உட்பட பல பாலங்களின் நிர்மாணிப்பின் மூலம் நிலத்தொடர்பிலான ஒரு சாலை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும் .

இம் நெடுஞ்சாலை உருவாக்கம் கிழக்கில் உள்ள மக்களின் பொருளாதாரத்திற்கும் ஏனைய அபிவிருத்தியிற்கும் முக்கிய படிக்கல்லாக அமைந்துள்ளது.

மண்முனை பாலம் 

இதனை விட கிழக்கில் தமிழ் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி என்று செல்லக்கூடிய அளவிற்கு உள்ள ஒரே ஒரு விடயம் மண்முனை பாலம் ஒன்றுதான். இப் பாலமானது படுவான்கரை பகுதியில் உள்ள ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு இன்றியமையாததாகவுள்ளது.இந்த ஒரு விடயத்தை தவிர எந்த ஒரு பாரிய அபிவிருத்திகளும் கிழக்கில் உள்ள தமிழ் பகுதிகளில் இடம்பெறவில்லை என்றுதான் குறிப்பிடவேண்டும்.அரசியல் தீர்வுக்கான போராட்டம் அர்த்தமற்று போகும் நிலை

போர் காலத்திலோ அனைத்து உலக நாட்டிற்கும் கொடுக்கப்பட்ட செய்தியோ பேர்ச்சுவார்தைகள் மூலம் இனங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்க்கலாம் என்றும் இதற்கு விடுதலை புலிகள் தான் தடையாக உள்ளார்கள் என்றும் இலங்கை அரசு கூறியது போல் போரின் பின் எந்தவொரு பேர்ச்சுவார்தைக்கும் உரிய ஒரு விகிதம் அளவிலான முயற்சியாவது மேற்கொள்ளப்படவில்லை என்பதும்தான் யதார்த்தம். அதேவேளை அரசியல் தீர்வோ எழுபது வருடங்களுக்குள் முன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொடர் கதையாக தொடர்ந்த வண்ணம் உள்ள இவ்வேளையில் தமிழர் வாழும் வடக்கு கிழக்கில் முக்கியமாக கிழக்கின் கள நிலைமைகளோ முற்றிலும் மாறுபட்டதாக காணப்படுகின்றது. மேலும் கூறுவோமானால் கடந்த எழுபது வருடம்களில் சனத்தொகை ரீதியாகவும் எல்லைகள் ரீதியாகவும் பெரும் மாற்றம் கண்டுள்ளது.

2020 களில் உள்ள கிழக்கை பொறுத்த அளவில் மூன்று இன மக்கள் வாழுகின்ற ஒரு மாகாணமாக துரித கதியில் மாற்றம் கண்டுவருகின்றது . தீர்வு ஒன்று கிடைப்பது என்பதே பெரும் ஐயமாக உள்ள இவ்வேளையில் அப்படித்தான் ஒரு தீர்வு கிடைக்கபோகின்றது என்று வைப்போமானால் எப்படிப்பட்ட தீர்வு கிழக்கிற்கு தேவை என்ற கேள்வியையும் தற்போதைய சூழ்நிலை எழ வைத்துள்ளது.

போர் முடிந்தும் பத்து வருடகாலத்தை கடக்கும் போதும் அரசியல் தீர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தைக்கு உரிய எந்தவொரு வேலைதிட்டங்களும் அற்ற நிலையில் , கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்காக ஆற்றிய பெரும் சேவையோ
‘தமிழ் மக்களுக்கு வரவிருக்கும் அரசியல் தீர்வின் வகைகளை கூறி காலத்தை வீண் அடித்தது மட்டும்தான்’

தமிழ் மக்களை பொறுத்த அளவில் கடந்த பத்து வருடங்களில் என்ன நடந்தது என்று சிந்தித்து முடிவெடுப்பதற்கு இந்த கால இடைவெளி போதுமானதாகும் . தமிழ் தலைமைகளை பொறுத்தவரையில் கடந்த 70 வருடங்களில் , நாள் ஒன்றில் இருந்தே அகிம்சை வழியில் தீர்வு என்ற மரபில் வாழ்ந்தவர்கள் மேலும் அவர்களை பொறுத்த அளவில் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையின் முக்கியமாக உள்ள விடயம்களை பார்க்கும் வகையில் சிந்திப்பதற்கு தீர்வு என்ற மாயை இடம்கொடுக்கவில்லை என்றும் தான் கூறவேண்டும்.தமிழ் தலைமைகள் இனியாவது யதார்த்தபூர்வமாக இயங்குமாஆனால் கிழக்கில் உள்ள மக்களை பொறுத்த அளவில் மேலும் தமிழ் தலைமைகள் அரசியல் தீர்வு ஒன்றுதான் முடிவு என்று தொடரும் பட்சத்தில் தமிழ் மக்களோ அதனை இனியும் முற்று முழுதாக நம்புவார்கள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். எம்மை பொறுத்தளவில் தமிழ் சமூகம் ஒற்றுமையாகவும் ஒருமைப்பாட்டுடனும் ஒருமித்து பயணித்தால் தான் சமூகத்திற்காக சாதிக்கக்கூடிய பெரும் சக்தியாக இருக்கமுடியும் . இந்த மக்கள் சக்தி தொடர வேண்டுமா அல்லது இல்லையா என்பது தமிழ் தலைமையிடம் தான் உள்ளது.மேலும் முக்கியமாக கடந்த நான்கு வருடம்களில் தமிழ் மக்களின் இச் சக்தியானது முறையான விதத்தில் உபயோகிக்கப்பட்டதா என்பதுதான் கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தின் அடுத்த கேள்வியாக உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று முக்கியமாக நல்லிணக்க ஆட்சியில் தமிழர் தரப்பு பங்காளியாக இருந்து முடிவுக்கு வந்த எதிர்கட்சி தலைவர் பதவியை தவிர சாதித்தது ஒன்றுமே இல்லை என்பதைத்தான் கிழக்கில் உள்ள தமிழ் சமூகம் பரவலாக நம்புகின்றது.அபிவிருத்தியை மையப்படுத்தி செல்ல முற்படும் தமிழ் சமூகம்ஆனால் கடந்த 26 அக்டோபர் 18 இற்கு பின்புதான் இருந்துதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த நிதி ஒதுக்கீடானது 1 கோடியில் இருந்து 20 கோடிகளுக்கு மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 2018 உள்ளுராட்சி தேர்தல்களுக்கு பின்னர் யாரும் தேடுவார் அற்ற நிலையில் இருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய நிதி ஒதுக்கீட்டின் பின்பு முக்கியமாக கிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லம்களிலும் மற்றும் அவர்களது அலுவலகம்களிலும் மக்கள் வெள்ளம் அலைமோதுவதை காணக்கூடியதாக உள்ளது. இவை மக்களுக்கு என்ன தேவையாக உள்ளது என்பதை மிக தெளிவாக காட்டுகின்றது.


இந்த யதார்தத்தையாவது இவர்கள் புரிந்து கொண்டு இனிவரும் காலம்களில் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு அபிவிருத்திக்கான வேலைதிட்டம்களுக்கு அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னுரிமை கொடுத்து அதனை யதார்த்தபூர்வமாக முன்னெடுப்பதட்கான தெளிவான திட்டத்தை தமிழ் மக்கள் முன் வைப்பதன் மூலம் தான், தமிழ் மக்களை போர் காலத்தில் ஏற்பட்ட அவலநிலையில் இருந்து மீட்பதோடு, மேலும் முன்பு பேணிக்காத்த தமிழ் மக்களின் ஒருமைப்பாட்டையும் தொடரலாம் என்பதிலும் எந்தவொரு ஐயமுமில்லை.

தமிழ் மக்களை பொறுத்த அளவில் போரிற்கு பின்னான பத்துவருட காலமும் ஒரு இருண்டகாலமாகவும் எந்தவொரு ஆக்கப்பூர்வமான விடயங்களும் மேற்கொள்ளப்படாத காலமாகவும் இருந்த வேளையில் மேலும் கிழக்கோ முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு அடித்தளமாக இருப்பதும், நீண்ட போரின் தாக்கத்தால் மீள முடியாமல் திண்டாடும் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் எதிர்காலத்தை மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளியுள்ளது. கிழக்கில் உள்ள தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாகவுள்ள பொருளாதாரம் , கல்வி , சுகாதாரம் , போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் காணக்கூடிய ஒரு யதார்த்த பூர்வமான அணுகு முறையை கையலாத பட்சத்தில் அடுத்த பத்து வருடம்களுக்கு பின்பும் நாங்கள் இதே மாதிரியான ஒரு கட்டுரையை தான் எழுதுவதற்கு தள்ளப்படுவோம் என்ற பெரும் மன தாக்கத்துடன் முடிக்கின்றோம்.ஆர்.சயனொளிபவன் & TEAM   -BATTINEWS.COM  

இன்றுடன் போர் முடிந்து பத்து வருடங்கள்.. இதுவரை நடந்தது என்ன? Rating: 4.5 Diposkan Oleh: Battinews Admin
 

Top