முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித்தினம் இன்று



முன்னாள் ஆளுநர்களான M.L.A.M. ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும்.

இன்று (12ஆம் திகதி) காலை 8 மணி முதல் மாலை 4 மணிக்கிடையில் எழுத்துமூலமான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 12 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த விடயம் தொடர்பில் நியமிக்கப்பட்ட பொலிஸ் குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக 6 முறைப்பாடுகளும் மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக 3 முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவற்றில் சில முறைப்பாடுகள் அரசியல்தரப்பு சார்ந்தவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்கான பொலிஸ் குழு தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு எதிராக மேலும் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்வைக்க முடியும் எனவும் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்கான பொலிஸ் குழு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர்களான M.L.A.M. ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக, பொலிஸ் தலைமையகத்தின் மூன்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த 4ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.