ரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்


- ஆர்.சயனொளிபவன் & TEAM -
  • வடகல்முனை விவகாரம் 
  • மனோகணேசன் விவகாரம் 
  • அரசியல் தீர்வு விவகாரம் 
  • விடுதலை புலிகளில் இருந்து கருணா பிரிக்கப்பட்டது 
  • நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் 

தமிழ் சமூகத்தின் பார்வையில் எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த 70 வருட கால பகுதியை எடுத்துப்பார்ப்போமானால்  கடந்த 40 ஆண்டு காலப்பகுதியும் பெரும் இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்த காலப்பகுதியாகவே அமைந்துள்ளது. 
1977 இல் பிரதமர் ரணிலின் மிகநெருங்கிய உறவுமுறைக்காரரும் மற்றும் அரசியல் ஆசானுமான முன்னாள் பிரதமரும் ஜனாதிபதியுமான J.R.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சி காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்சியாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இன கலவரங்களான 1979ம் ஆண்டும், 1981ம் ஆண்டும் அதனை தொடர்ந்து 1983ம் ஆண்டு ஜூலை இறுதிப்பகுதியில் நன்கு திடடமிட்ட முறையில் பாரிய அளவிளான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியவகையில் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான வன்முறைகள் தமிழ் மக்களின் இருப்பையே முற்று முழுதாக ஆட்டம் காணவைத்தது. மேலும் அவ் வேளையில் J.R.ஜெயவர்த்தனாவின் தமிழ் மக்களுக்கெதிரான போக்கும் தமிழ் இளைஞர்களை ஆயுத போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கான உந்து சக்தியாகவும் இருந்தது.
1983 ஜூலை  கலவரத்தை தொடர்ந்து ஒருபக்கம் தமிழ் இளைஞர்களிடையே ஆயுதப்போராட்டம் தீவிரமடைய மறுபக்கம் எமதுநாட்டிலே தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானதும் நேர்த்தியானதுமான எதிர்காலம் இல்லை என நம்பிய தமிழ் சமூகம் நாட்டை விட்டு பெருமெண்ணிக்கையில் வெளியேற ஆரம்பித்து இன்றுவரை 1,000,000 ( 10 இலட்சத்திற்கு ) மேலான மக்கள் வெளியேறிய தருணத்தில் இன்றும் மற்றைய  நாடுகளில் சென்று வாழ்வதற்கு சந்தர்ப்பங்கள்  தோன்றுகின்ற சந்தர்ப்பங்களில்  தமிழ் சமூகம் வெளியேறும் தன்மையை காணக்கூடியதாகவும் உள்ளது.

பிரதமர் ரணிலை பொறுத்தளவில் 1977 தேர்தலின் ஊடாக தமது 28வயதில் பாராளுமன்றத்திற்கு நுழைந்தவுடன் அவருடைய மாமாவான J.R.ஜெயவர்தனவினால் இவருக்கு இளைஞர் விவகாரம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சும் வழங்கப்பட்டது. மேலும் இவரை J.R.ஜெயவர்த்தனா தமது அரசியல் வாரிசு ஆகவே கருதினார். இவ்வாறான பின்னணியில் இருந்து வந்த ஒருவர் தமிழ் மக்களுக்கு எவ்வாறான நன்மைபயக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வர் என்று தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டிய நிலைப்பாட்டிற்கு இவருடைய தொடர்ச்சியான செயற்பாடுகள் இட்டுச்செல்கின்றது. மேலும் இவருடைய அரசியல் ஆசான் J.R.ஜெயவர்த்தன அவர்களினால் 1977ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழ் சமூகத்தை பல வழிகளிலும்  நிலைகுலைய வைக்கும் முயற்சியானது பிரதமர் ரணிலால் இன்றுவரை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு செல்வதை காணக்கூடியதாகவுள்ளது . அந்த வகையில் பார்ப்போமாயின்


  கல்முனை வடக்கு  விவகாரம் 

பாராளுமன்றத்தில் பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பல நம்பிக்கையில்லாப்பிரேரணைகளில்  இறுதியாக JVPயினரால் கடந்த ஜூலை  மாதத்தில்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 வாக்குகளுமே மீண்டும் ஒரு முறை பிரதமர் ரணிலின் அரசாங்கத்தை காப்பாற்றியுள்ளதும்  யாவருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும். அதேவேளை அந்த வாக்கெடுப்பிற்கு சற்று முன்பு  கல்முனை வடக்கு   பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஒரு அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளதாக தமிழ் தேசிய  கூட்டமைப்பும் தமது அறிக்கையின் மூலம் அறிவித்தது மட்டுமல்லாது மேலும் மறுநாளே புதிய கணக்காளர் தமது கடமையை பொறுப்பேற்பார் என்றும் தமிழ்தேசியகூட்டமைப்பால் அறிவிக்கவும்பட்டது. இதனை தொடர்ந்து அன்று மாலை வேளை கல்முனை தமிழ் பகுதிகளில் உள்ள தமிழ் இளைஞர்களால் அப்பகுதிகளில் பட்டாசுகள்  கொளுத்தி கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை பிரதமர் ரணிலை நன்கு தெரிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் கணக்காளர் நியமிக்கப்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டவுடன் அதனை தொடராமல் அதாவது சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் பிரதமர் ரணிலுக்கும் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்காமல் தூக்கத்திற்கு உள்ளாகிவிட்டனர் 

ஆனால் இன்று  இக் கட்டுரை எழுதும் வரை கல்முனை வடக்கு  செயலாளர் பிரிவுக்கான கணக்காளர் நியமிக்கப்படவும்  இல்லை அதேவேளை இச் சிறிய விடயத்தையே சாதிக்கமுடியாது  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலை  நகைச்சுவையாகவும் மாறியுள்ளது. மேலும் கணக்காளர் இன்றுவருவார் நாளைவருவார் என்று மீண்டும் ஒருமுறை  ஏமாற்றத்தையே தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ளது. நியமிக்கப்பட்ட கணக்காளர் நடை பவனியாக கொழும்பில் இருந்து புறப்பட்டிருந்தாலும் இன்று    கல்முனை வடக்கு  செயலகத்தை வந்தடைந்திருக்கலாம் .

ஆனால் இச் செய்திவெளியாகியவுடன் முஸ்லீம் காங்கிரசின் உபதலைவரும்   பாராளுமன்ற உறுப்பினருமான  ஹாரிஸ் அவர்கள் உடனடியாக ஒரு செய்தி பிரசுரத்தை வெளியிட்டுயிருந்தார் அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிப்பது போன்று வட  கல்முனை உப பிரதேசசெயலகத்திற்க்கு கணக்காளர் நியமிக்கப்படவில்லை என்றும் ஆனால்  அவ் வேளையில் அவரது கருத்து முக்கியத்துவம் பெறவுமில்லை அத்தோடு அவருடைய குரல் ஒரு தனிக்குரலாகவும் இருந்தது. மேலும் அவரோ  தமது முயற்சியில் அனைத்து முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து தொடர்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தம்கள் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பாராளுமன்ற உறுப்பின்னர் ஹாரிஸ் கூறியது கருத்து சரியானதாக தென்படுகின்றது மட்டுமல்லாது  முஸ்லீம் பாரளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் வகித்த அமைச்சு பதவிகளை மீண்டும் பெற்ற வேளையில் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான  ஹாரிஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர்   வட கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாது என்ற நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்படும் வரை தாம்  அமைச்சு பதவியை பெறுவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச்செயற்பாட்டானது  தமது மக்களுக்கான  அவர்களுடைய ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றது. முஸ்லீம் அரசியல் தலைமைகளை பொறுத்த அளவில் அவர்கள் அரசியலில் தேர்ச்சிகண்டவர்களாகவும் மேலும் அவர்கள் அமைதியான அரசியலை மேற்கொள்வதில் நிபுணர்களாகவும் விளங்குகின்றனர். மாறாக தமிழ் தரப்பின் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களுக்கு கற்பித்தது  ஆர்ப்பாட்ட அரசியல் ஒன்று மட்டும் தான்  அதில் தமிழ் மக்கள் சாதித்தது ஒன்றுமேயில்லை மாறாக ஆர்ப்பாட்ட அரசியல் மூலம்  தமிழ் அரசியல் இதுவரை வெற்றிகரமாக அடைந்தது தமது செல்வாக்கையும் பதவிகளையும்  தக்கவைத்துக்கொள்வதுதான். 

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தளவில் வட கல்முனை விவகாரம்  பிரதமர் ரணிலின் வார்த்தையை நம்பியதால் ஏற்பட்ட பெரும் அவமானமும் ஏமாற்றமாகவும் உருவெடுக்கின்றது மேலும் இதன்  விளைவு எதிர்கால அரசியலில் பிரதமர் ரணிலுக்கே எதிர்விளைவாகவும் அமையலாம். அதாவது இவ் விடயதிற்கு சரியான தீர்வு கிடையாதா பட்சத்தில்  தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில்  உள்ள தமிழ் மக்களின் நம்பிக்கையை பாரிய அளவில் இழக்கநேரிடும் என்பதில் ஐயமே இல்லை.

பிந்திய செய்திகளின் படி முஸ்லீம் அரசியல் வாதிகள் புதிதாகவொரு யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அதாவது வடகல்முனை பிரதேச செயலகத்துடன் மேலும் இரு பிரதேச செயலகங்கள்  உருவாக்கத்திற்கான பரிந்துரை எனவும் இதனை  சம்பந்தன் அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் இவையாவும் காலத்தை இழுத்தடிக்கும் யுக்தியோ எனவும் தமிழ் தரப்பால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மனோகணேசன் விவகாரம்

அண்மைய காலமாக அமைச்சர் மனோகணேசன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்சியாக விஜயங்களை மேற்கொள்வதையும் அதிலும் குறிப்பாக கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியான பட்டிருப்பு தொகுதியில் கூடுதலான அளவு விஜயங்களை மேற்கொள்ளுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. மேலும் அவருடைய அமைச்சிற்கு 200கோடிகளுக்கு மேலான நிதி ஒதுக்கப்படும் அமைச்சர் மனோவோ அந்த நிதியில் கூடுதலாக பகுதியை  இளைஞர் அமைப்புகளால் கோரப்படும் வேலைத்திட்டங்களுக்கு பகிர்தளிப்பதையும் அத்தோடு  இப் பகுதியில் தமிழ் தேசியத்திற்கு எதிர் போக்குஉடையவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சிகளும்  வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டும்  வருகின்றது. இதன்  தொடர்சியுமாக அமைச்சர் மனோ மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று முன்னாள் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் அவர்களை சந்தித்து பேசியது என்பன குறிப்பிடத்தக்க முக்கிய விடயம்களாக  உள்ளன. இவை யாவும் ஏற்கனவே எந்தவொரு  தமிழ் மக்களின் கோரிக்கைகளையும்  நிறைவேற்ற முடியாது பலவீன நிலையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் பலவீன நிலைக்கு தள்ளும் முயற்சியாகவும் கருதப்படுகின்றது.

குறிப்பாக கிழக்கில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அமைச்சர் மனோவிற்கு வழங்கப்பட்ட நிதிகள் யாவும் ஒன்று சேர்க்கப்பட்டு இப்பகுகளில் உள்ள மிக அத்தியாவசியமான தேவைகளில் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுமேயாயின் குறிப்பாக  போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படைத்தேவைகள் சிலவற்றையாவது  பூர்த்திசெய்யலாம் என்ற கருத்தும் பரவலாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரதமர் ரணில் மனோவின் அமைச்சின் ஊடக வடகிழக்கு அபிவிருத்திக்கென பெருமளவு  நிதியை ஒதுக்கி அதனுடாக வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை பிரிக்கும்  கைங்கரியத்தை சிறப்பாக மேற்கொள்வதாகவும் கருதப்படுகின்றது. மேலும் தமிழ் அரசியல் தலைமையை  பொறுத்தளவில் இதனையும் தடுக்கமுடியாது வெறும் பார்வையாளராகவும் மற்றும் பிரதமர் ரணிலுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தோள்கொடுக்கும் கட்சியாகவும்  மாற்றம் கண்டுள்ளது. ஆனால் பிரதமர்  ரனிலோ மறுபக்கத்தில் தனக்கு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் கைகொடுக்கும் தமிழ் மக்களின் தேசியக்கட்சியை  செயலிழக்க செய்வதில் முழுமூச்சுடன் செயற்படுவதை தெளிவாக பார்க்கக்கூடியதாகவுள்ளது.


அரசியல் தீர்வு விவகாரம்

நல்லாட்சி அரசு பதவிக்கு வந்து 4 ½ வருடங்கள் கழிந்த வேளையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி மிக குறைந்தளவு சொல்லளவிளாவது பிரதமர் ரணில் தரப்பால் பேசப்படவில்லை என்பதுதான் யதார்த்தம். ஏன் இங்கு பிரதமர் ரணிலை குறிப்பிடவேண்டியுள்ளது எனில் நல்லாட்சி அரசு உருவாக்கத்திற்கு முக்கிய புள்ளியாக விளங்கியது அவருடைய ஐக்கிய தேசிய கட்சி. மேலும் நல்லாட்சி அரசில் உள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரக்கிடையே ஆரம்பகாலத்தில் நல்ல சுமூகமான உறவுமுறையே  நிலவியது அதன் பிரதிபலிப்பே  19A திருத்தச்சட்டம் இச் சட்டமானது ⅔ பெரும்பான்மையோடும் மற்றும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 200 ற்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவை பெற்று நிறைவேறற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தளவில் இக்காலப்பகுதியில் அவர்களுக்கும் மிகவும் அருமையான சந்தர்ப்பம்  இருந்தது என்று தான் கருதவேண்டும் ஆனால் அவர்களோ எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்கு கொடுத்த முக்கியத்துவம் போல் அரசியல் தீர்விற்கு  கொடுத்ததாக  தெரியவில்லை. மேலும்   நாட்டில் ஜனநாயகம் நிலை நாட்டப்படவேண்டும் என்பதில் மட்டும் தான் உறுதியாகய இருந்தார்களே தவிர  தமிழ் மக்களின் அரசியல் தீர்வு  பற்றி ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டார்களா  என்று தென்படவில்லை. வரும் காலங்களில் இவ்வாறன ஒரு சந்தர்ப்பம்  மேலும் ஒரு முறை கிடைக்கும் என்பதும் ஐயமே.

மேலும் பிரதமர் ரணிலை நம்பி மோசம் போன கதையாகவே முடிந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தளவில் நல்லாட்சி அரசில்  ஆரம்பகாலத்தில் இருந்து இன்று வரை நடந்தது என்ன என்று  பார்ப்போமேயானால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை  தவிர்ந்த தமிழர் தரப்பு அரசியல் தீர்விற்கோ, அபிவிருத்திக்கோ  அல்லது போரால் அழிந்த வடகிழக்கிற்கோ  என பெருமளவு நிதியையும் கோரவும்  இல்லை, அதாவது முஸ்லீம் அரசியல் தலைமைகள் ஒவ்வொரு விடயத்திலும் தொடர்சியாக அழுத்தம்களை பிரயோகித்து தமது கோரிக்கைகளில் வெற்றிகாண்பதும் தொடர்சியாக காணக்கூடியதாகவுள்ளது. அதேவேளை  பிரதமர் ரணில் தங்களுடைய மக்களின்  அரசியல் தீர்வு பற்றி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில்லேயே இருந்தவர்களாகவும் தென்படுகின்றனர்  . ஆனல் பிரதமர் ரணிலோ தமிழ் மக்களின் அரசியல் தீர்வில்  சிறிதளவே கூட அக்கறை கொண்டவராக  தெரியவில்லை.  நல்லாட்ச்சி அரசின் ஆட்சிக்காலம் முடிவிற்குவரும் இக்காலகட்டத்தில்  அரசியல் தீர்வு விடயத்தில் மேகொள்ளப்பட்ட முயற்சியானது 0% மாகவே இருக்கும் .
விடுதலை புலிகளில் இருந்து கருணா பிரிக்கப்பட்டது

2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் மிகவும் வலுவான நிலையில் இருந்த வேளையில் அக்காலப்பகுதியில் பிரதமராக இருந்த ரணில் அவர்களின் அரசாங்கத்தினிடம் நோர்வேயின் மத்தியஸ்துடன் இருதரப்பு பேச்சுவார்தைகளும் உலகின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்தது ஆனால் காலம் செல்ல செல்ல பேர்ச்சுவார்தையால் எந்தவொரு முன்னேற்றமும் அற்ற நிலையில் பேர்ச்சுவார்த்தையும் முடிவிற்குவந்தது பேச்சுவார்தையில் இருதரப்பினருக்கும் என்ன பயன் கிடைத்ததோ இல்லையோ ஆனால் ரணில் அரசாங்கத்தை பொறுத்தளவில் அவர்கள் வெற்றிகரமாக அவ்வேளை விடுதலை புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த கருணாவை  பிரிப்பதற்கு முக்கிய காரணியாக இருந்துள்ளனர்.. இதன் தொடர்சியாக மிகவும் வலுவான நிலையில் இருந்த விடுதலை புலிகள் இயக்கம் ஆட்டம்காணத்துவங்கியது மட்டுமல்லாது அவர்களுடைய இராணுவ இரகசியங்களும் அரசிற்கு தெரியவந்தது. இவ் வீழ்ச்சியில் இருந்து விடுதலை புலிகளால் மீளவேமுடியவில்லை. காலத்திற்கு காலம் இவ் விடயத்தை பிரதமர் ரணில் பெருமையாக குறிப்பிடுவதையும் காணக்கூடியதாகவும் உள்ளது.


நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கு 6 மாதம் வரையிலான காலம் இருக்கின்ற இவ் வேளையில் முக்கியமாக தமிழர்களின் அரசியல் தீர்வு பற்றிய கதைக்கே இனி இடமே இல்லாத காலப்பகுதியாக கருதப்படும் இவ் வேளையில்  குறைந்தது மீண்டும் ஒரு வருட காலம் கடக்கவுள்ளது. தற்போதுள்ள நிலவரம்களின் படி, இத் தேர்தலை பொறுத்தவகையில்  இருமுனை போட்டியாக இருப்பதற்குரிய சாத்தியப்பாடுகளே அதிகமாக தென்படுகின்றன. ஜனாதிபதி மைத்திரியின்  பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் மஹிந்தவின் பொது எதிர்க்கட்சிகளின் சார்பாக கோத்தபாயா ராஜபக்ஸவும்  மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக பிரதமர் ரணிலும் களத்தில் இறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன  .  ஐக்கிய தேசிய முன்னணியை பொறுத்த அளவில் மேலும் சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜெயசூரிய ஆகிய இருவரின் பெயர்களும்  முன்மொழியப்படுவதாலும் ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளரின்  வெற்றிக்கு அவ் முன்னணியில் உள்ள அனைவரினதும் ஆதரவும்  இருக்குமா   என்ற கேள்வியும் எழுகின்றது . 


எமது நாட்டை ஆட்சி செய்த தலைமைகளுள் தமிழ் சமூகம் பெரிதும் பாதிப்பிற்கும்   அழிவிற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளான காலப்பகுதியாக 1980களில் இருந்து இன்றுவரையான 40 வருடகால்பகுதியை குறிப்பிடலாம். குறிப்பாக இக் காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளையும் அழிவுகளையும் மேலும் ஏமாற்றங்களையும் பார்ப்போமாயின் அதில் முக்கிய இடம்களில் J.R.ஜெயவர்த்தன, மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க  ஆகியோர் உள்ளார்கள் இவற்றில் மஹிந்தவின் காலப்பகுதியில் உக்கிரமான போர் இடம்பெற்றுள்ளது. அதேவேளை அவரும் அவருடைய சகோதரர் கோத்தாவை கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக உலக போர் விதிகளுக்கு அமையாத முறையில் கொடிய யுத்தத்தையும் அரங்கேற்றி போரில் வெற்றியும் கண்டார்.

ஆனால் ஜனாதிபதி J.R.ஜெயவர்த்தன மற்றும்  பிரதமர் ரணில் பொறுத்தளவில் 1970 - 1980 களில் ஆக்கிரோவசமான  முறையில் அப்போது இருந்த பெரும்பாலான அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து அதன்  மூலம் தமிழ் மக்களின் இருப்பை இந்த நாட்டில் ஆட்டம்காணவைத்ததில் ஆரம்பித்து மேலும் அதனைத்தொடர்ந்து   அமைதியானதும்  சாதுரியமானதுமான அரசியல் முனைப்புகளினுடாக  தமிழ் மக்களுக்கிடையே பிரிவுகளை ஏற்படுத்தி அவர்களின்  ஒருமைப்பாட்டையும் அரசியல் வலிமையையும்  வலுவிழக்க செய்வதன் மூலம் அவர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் முயற்சியை பிரதமர் ரணில் இன்றுவரை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்வதை தெளிவாக காணக்கூடியதாகவும் உள்ளது.  குறிப்பாக  பிரதமர் ரணில் தமிழ் மக்களின் தலைவர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் அரசியல் வாதிகளின் உதவியுடன் தமிழ் சமூகத்தின் ஒற்றுமையை சிதறடிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

தற்போதைய நிலைமைகளின் படி எவை எவ்வாறு அமைந்தாலும் ரனிலோ அல்லது கோத்தபாயவோ புதிய ஜனாதிபதியாக  வருகின்ற பட்சத்தில் தமிழ் மக்களை பொறுத்த அளவில் பெருமளவு எதிர்பார்பார்ப்புகளுடன்  இருக்கமுடியாது. மேலும் எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த காலப்பகுதியில் இருந்து இன்றுவரையான 70வருட காலப்பகுதியில் தொடர்ந்து வந்த புதிய சிங்கள தலைமைகளை பெரும் எதிர்பார்ப்புடன் பார்ப்பதும் பின்னர் ஏமாற்றத்துடன் அவர்களுடைய ஆட்சி முடிவிற்கு வருவதும் தமிழ் சமூகம் காலகாலமாக பார்த்த ஒரு விடயமுமாகும். 

- ஆர்.சயனொளிபவன் & TEAM -