ஒரு குடம் தண்ணீரில் மூணுபேர் குளிக்கிறம்!; மட்டக்களப்பில் தண்ணீர்ப் பஞ்சம்



(செ.துஜியந்தன் )


'நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு'

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால் மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும் என திருவள்ளுவர் சொல்கின்றார். இன்று நீருக்காக மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

'எறிக்கிற இந்த வெயிலுக்கு குடிக்கிறத்துக்குகூட தண்ணீயில்லாம திணடாடுறம். என்ட எழுபது வயசு காலத்தில இப்படியெரு தண்ணீப்பஞ்சத்த நான் பாக்கல்ல. உன்னிசசைக்குளம் வத்தின எண்டும் நான் கேள்விப்படல்ல. புள்ளகுட்டிகள் எல்லாம் தண்ணீயில்லாம சரியா கஷ்டப்படுகுதுகள். செஞ்ச பயிரெல்லாம் தண்ணியில்லாம கருகிப்போச்சு. ஆடு மாடு எல்லாம் குடல் சுருண்டுபோய்க்pடக்குதுகள். எல்லையில் இருக்கிற சனம் எல்லாம் அங்கிருந்து வேற இடத்துக்குப் போகுதுகள். குடிக்கத் தண்ணியில்லமா சனமெல்லாம் தவிக்குது. படிச்ச ஐயாமார் எங்கட கிராமங்களுக்கு குடிக்கத்தண்ணி கொண்டு தாறத்துக்கு உதவிசெய்யுங்க.' என்றார் மட்டக்களப்பு கொடுவாமடு பிரதேசத்தைச் சேர்ந்த எழுபது வயசு நிரம்பிய கணபதிப்பிள்ளை.

இன்று காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கில் தண்ணீர்ப்பஞ்சத்துக்கு முகம்கொடுக்க வேண்டிய சூழலுக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான உன்னிச்சைக்குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்துவிட்டது. இங்கு 33 அடி நீர் மட்டம் தேக்கிவைக்கப்படுவது வழமையாகும். அந் நீர் மட்டம் குறைவடைந்து தற்போது 5 அடிக்கும் குறைவான நீர் மட்டமேயுள்ளது. இதே போன்று அம்பாறை மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கமான சேனநாயக்கா சமூத்திரத்தில் வழமையாக 7இலட்சத்து 70 ஆயிரம் அடி ஏக்கரில் நீர் தேக்கிவைக்கப்படுவதும் வழக்கமாகும். தற்போது இந் நீர் மட்டமும் குறைவடைந்து 35 ஆயிரம் அடி ஏக்கர் நீரேயுள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்தில் பல கிராமங்களில் குடி நீரைப்பெறுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகிவருகின்றனர். பல இடங்களில் தண்ணீருக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் சண்டைபிடிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

கடும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 96 கிராமசேவகர் பிரவுகளில் வசிக்கும் மக்கள் தண்ணீர் பிரச்சினை காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகப்பிரிவுகளில் குடிநீர் பிரச்சினை காரணமாக மக்கள் அல்லாடிவருகின்றனர். என்றுமில்லாத வகையில் தண்ணீர்ப்பஞ்சம் தலைவரித்தாடுகின்றது. தற்போது க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவருவதினால் பரீட்சை எழுதும் மாணவர்கள் போதியளவு தண்ணிர் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மட்டக்களப்பு பன்சேனை கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூறும்போது...

'தண்ணியில்லாமல் ஒழுங்கா குளிக்கக்கூட முடியல்ல. ஒரு குடம் தண்ணியில் மூணுபேர் மேல் கால் கை கழுவுறம். குளிக்கிறம். எங்கட தலைவிதி இதுதான்போல ஒரு நாளைக்கு ரெண்டு குடத்தில் தண்ணி எடுத்துவந்து ஒரு நாளைக்கு பாவிக்கிறம். எக்ஸாம் எழுதுற எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்குது. ஒழுங்கான குளியல் இல்லாததினால தலைக்குள்லையும் இடிக்குது. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வந்து பாரக்கிறதும் போறதுமாக இருக்காங்க ஒரு நடவடிக்கையும் எடுக்காங்கல்ல.' என்றார்.

கடந்த வருடம் பெய்யவேண்டி வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை சரியாகக்கிடைக்காத காரணத்தினால் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து விட்டது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் வெட்டு பத்து மணித்தியாலங்கள் அமுல்படுத்தப்படுகின்றது. இந் நிலை நீடித்தால் எதிர்வரும் மாதம் முழுமையான நீர் வெட்டு வரலாம் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர்ப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என மாவட்ட செயலகமும், நீர்ப்பாசனம் மற்றும் தேசிய நீர் வழங்கல் சபை ஆகியன ஆராய்ந்து வருகின்றன. மாவட்ட செயலகத்தில் அடிக்கடி நீர் பிரச்சினைபைற்றியே கூடிக்கூடி பேசப்பட்டுவருகின்றது. மாவட்ட மக்களை தண்ணீர்ப் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக மாற்று நீர் நிலையங்களை இனங்காணும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்ட்டுவருகின்றன என மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காடுகளிலுள்ள நீர் நிலைகள் வற்றியதினால் அங்குள்ள காட்டு விலங்குகள் மக்கள் குடியிருப்பு மனைகளை நோக்கி படையெடுத்துவருகின்றன. குறிப்பாக காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக எல்லைப்புற கிராமங்களுக்குள் உட்புகுந்து அட்டகாசம் பண்ணிவருகின்றது. எல்லைப்புறங்களில் வசிக்கும் மக்கள் சிறுகச் சிறுக சேர்த்து வைத்த நெல் போன்ற தானியங்களையும், வீடுகளையும், உடமைகளையும் காட்டுயானைகள் தாக்கி அழித்துச்செல்கின்றது. இதனால் வாழ்வாதரம் உட்பட அனைத்தையும் இழந்து நிர்க்திக்குள்ளாகியும் வருகின்றனர்.

நீர் இன்மையால் விவசாயிகள் தமது நெற் பயிர்ச் செய்கைகளை கைவிட்டுள்ளனர். சேனைப்பயிர்ச் செய்கையாளர்களும் தங்களது தோட்டச் செய்கையை கைவிட்டுள்ளனர். இதேபோன்று கால் நடைவளரப்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் உற்பத்தி வீழச்சியடைந்துள்ளது. ஆடு மாடுகள் உணவின்றியும் நீர் இன்றியும் அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றன. சில உயிரிழந்தும் வருகின்றது. 

தற்போது கடும் உஷ்ணம் நிலவுகின்றது. இந்த உஷ்ணத்தை தணிப்பதற்கு நீர் இன்மையால் நிம்மதியைத் தொலைத்தவர்களாக கிழக்கு மக்களுள்ளனர். எல்லைப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அங்குள்ள பிரதேச சபைகளினால் கூட போதியளவு நீரை வழங்க முடியாதுள்ளது. இதனால் நீரைக்கொண்டு செல்லும் பிரதேச சபை ஊழியர்களுக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டுவருகின்றன. உன்னிச்சைக்குளம் வற்றியதால் நகர்ப்புறங்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதினால் சில உணவகங்களிலும் நீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. உணவகங்களின் வியாபார நடவடிக்கையும் ஸதம்பிதம் அடைந்துள்ளது. 

இந்த உலகத்தில் யுத்தம் ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகத் தான் நடக்கும் என்பது தற்காலத்தில் நிருபணமாகிவருகின்றது. எதிரவரும் நாட்களில் மழை பெய்யாவிட்டால் தற்போதுஇருப்பதைவிட மிகவும் மோசமான தண்ணீர்ப்பஞ்சத்திற்கு மக்கள் முகம் கொடுக்கும் நிலை உருவாகும். முக்களின் நலன் கருதி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தண்ணீரை சேமித்து வைக்கும் முறையான திட்டம் ஒன்றை செய்யவேண்டும். நிறைய நீர் நிலைகளை உருவாக்கவேண்டும். அக் காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் எல்லோரும் பெரிய பெரிய குளங்களைக் கட்டினார்கள், புனரமைத்தார்கள் மக்களைப்பற்றியே சிந்தித்தார்கள். இன்றுள்ள அரசியல்வாதிகளோ எப்படி மக்கள் பணத்தைசுருட்டலாம் எங்கு மாளிகை கட்டலாம் என்பதைப்பற்றியே சிந்திக்கின்றனர்.

நாட்டில் நிலவும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தை ஆட்டிப்படைக்கும் தண்ணீர்ப் பிரச்சினைக்கு அனைவரும் இணைந்து முறையான செயற்திட்டங்கள் ஊடாக நல்லதொரு தீர்வைப்பெற்றக்கெடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.