இந்த அழகிய தேசத்தை அனைத்து இன மக்களும் சேர்ந்துதான் பாதுகாக்க வேண்டும்(எச்.எம்.எம்.பர்ஸான்)

இந்த அழகிய தேசத்தை தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள், பேகர்கள், மலைநாட்டு தமிழர்கள் என அனைவரும் சேர்ந்துதான் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மூத்த எழுத்தாளருமாக மக்கத்துச்சால்வை புகழ் எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை நேற்று (12) செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. தொழுகையின் பின்னர் இடம்பெற்ற விசேட ஒன்று கூடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

கடந்த ஏப்ரல் 21 நடைபெற்ற அந்த துக்க சம்பவத்திற்கு இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் பொறுப்புதாரிகளாக இருக்கின்றோம். அது முஸ்லிம்கள் மட்டுமள்ள என்பதையும் நீங்களும் நாங்களும் புரிந்து வைத்துள்ளோம்.

எனவே எதிர்காலத்திலும் நாங்கள் அனைவரும் இந்த அழகிய தேசத்தை சமாதான பூமியாக மாற்றியமைக்க இன, மத, பிரதேச, கட்சி பாகுபாடின்றி செயற்பட வேண்டும் அவ்வாறு செயற்பட்டால்தான் இந்த நாட்டில் அனைத்து மக்களும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியும். 

வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஜீ.எஸ்.ஜெயசுந்தர, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அங்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகளை நோக்கி நீங்கள் இந்த உன்னதமான நிகழ்வில் பங்கேற்றது இந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கு நம்பிக்கையையும் உங்கள் மீது அன்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.