அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் மூன்று மாடிக்கட்டடம் திறந்து வைப்பு



அன்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டம் இலங்கை திருநாட்டில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இத்திட்டம் கல்வியில் பாரிய மாற்றத்தை தோற்றுவித்துள்ளது. இவையனைத்தும் நல்லாட்சியின் பயனாக நாம் கண்ட பயன்களாகும் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்
.
அன்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்;டத்திற்கமைய இன்று நாடளாவிய ரீதியில் 500 பாடசாலை கட்டடங்கள் தேசிய நாடளாவிய ரீதியில் திறந்து வைக்கப்படுகின்றன.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டடத்தை இன்று(09) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

கடந்த ஆட்சியாளர்களை விட இந்த ஆட்சியிலே கல்விக்கான முக்கியத்துவம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரதமர் கல்வி அமைச்சர் உள்ளிட்டோரின் ஒருங்கிணைந்த சிறந்த இத்திட்டத்தாலே வளப்பங்கீட்டில் புறக்கணிக்கப்பட்ட பாடசாலைகள் கூட அதிக வளங்களை பெற்றுள்ளது என்றார்.

மேலும் இந்த நாட்டிலே மறுக்கப்பட்டிருந்த ஊடகவியல் சுதந்திரம் இந்த ஆட்சியிலே வழங்கப்பட்டள்ளது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தங்களது செய்திகளை வெளியிடும் நிலை தோன்றியுள்ளது. வடகிழக்கிலே இராணுவம் மற்றும் ஏனைய தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 85 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் நல்லாட்சியின் பயனாக நாம் கண்ட பயன்களாகும் எனவும் கூறினார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் எனும் எண்ணம் தற்போதுள்ள அனைத்து கட்சிகளுக்குள்ளும் உருவாகியுள்ளதுடன் அதில் அதிக கவனமும் செலுத்தி வருகின்றது. இந்நிலையிலும் பல கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் குழப்ப நிலையை எதிர்கொண்டுள்ளது. ஆயினும் ஜனாதிபதி ஆட்சி முறை தேவையில்லை என கூறிவந்த மக்கள் விடுதலை முன்னணியும் தமது வேட்பாளரை நிறுத்தியுள்ளது என்றார்
.
இதேவேளை கட்சிகள் அனைத்தும் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொள்ளாது தமது சுய இலாபத்திற்காக கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதையும் அதற்காக மக்களை பணயம் வைப்பதையும் காணமுடிகின்றது. ஆகவே நாட்டின் நன்மை கருதி அனைவரும் ஒன்று சேர்ந்து பயணித்து நாட்டை முன்னேற்ற முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்

தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி க.சோமபால தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக திருக்கோவில் கல்வி வலய பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் கலந்து கொண்டார்.
நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து வரவேற்றனர்.
 வரவேற்பின் பின்னர் தேசிய கொடியேற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.அதன் பின்னர்
பின்னர் அதிதிகள் மற்றும் மாணவர்கள் இணைந்து கட்டடத்தினை திறந்து வைத்தனர்.
பின்னராக பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.