எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் சட்டத்தரணி பதவியில் இருக்க தகுதியற்றவர் என சத்திய கவேஷகயோ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் நேற்று(வியாழக்கிழமை) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சத்திய கவேஷகயோ என்ற அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி பிரேமநாத் சீ. தொலவத்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சிக்கு இணங்குவதில்லை என தெரிவித்த காரணத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் சட்டத்தரணி பதவியில் இருக்க தகுதியற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு கையளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட யோசனை ஒன்றிற்கு வடக்கின் செயற்படும் 5 அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்திருந்தன.

வடக்கு மற்றும் கிழக்கினை ஒருங்கிணைத்து சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுத்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழித்தல், வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள பௌத்த குடியேற்றத்தைத் தடுத்தல் மற்றும் சிங்கள கிராமங்களை உடனடியாக அகற்றுதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் குறித்த யோசனையில் உள்ளடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.