இந்த அரசாங்கத்தில் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம்

இந்த அரசாங்கத்தில் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டமாக காணப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எதையும் மிச்சப்படுத்தவில்லை.

கடன் சுமை அதிகரித்துவிட்டது. சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட்டார்கள். அதனுடைய விளைவுகளை மக்கள் இன்னமும் அனுபவித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள் என்று தமது அரசாங்கத்தில் ஊழல் மோசடிக்காரர்களுக்கு இடமளிக்கமாட்டோம் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்தவர்கள் பெப்ரவரி மாதமே மத்திய வங்கியில் கொள்ளையடித்து விட்டனர்.

கோட்டபாய ராஜபக்ஷவும், சஜித் பிரேமதாசவும் கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொறுப்பேற்றதும் ஊழல் செய்தவர்களை, கொள்ளைக்காரர்களை தண்டிப்போம் என்று ஒரு வசனம் கூட பேசுவது கிடையாது.

ஏனென்றால், ஊழல் செய்தவர்களை மேடையில் வைத்துக்கொண்டு தண்டிப்போம் என்று அவர்களால் ஒருபோதும் கூறமுடியாது.

இரண்டு தரப்பினர்களிடமும் ஊழல் செய்தவர்கள், நாட்டைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் இருக்கிறார்கள். எனவே, இந்த நாட்டை மீண்டும் அதே கொள்ளைக்காரர்களிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள்.

இலங்கையில் பொலிஸ் திணைக்களம் மிகவும் சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனினும், பாதுகாப்பிலும் அரசியல் தலையீடு தலைவிரித்தாடியமையால்தான் இந்த அரசாங்கத்திலும் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

இந்த அரசாங்கத்தில் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டமாக காணப்பட்டது.

கொலை, கொள்ளை என்று சகல திருட்டுத்தனங்களையும் மிகவும் கச்சிதமாக கண்டுபிடிக்கும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

கோடிக்கணக்கில் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவருபவர்கள் இன்று அரசியல் பலத்தோடு வெளியே சுதந்திரமாக நடமாடும் போது, அந்த போதைப்பொருளை கொள்வனவு செய்து பாவித்தவர்கள் சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

இன்று பொலிஸாருக்கு சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்காது அங்கும் அரசியல் பலத்தை பிரயோகிக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.