மட்டக்களப்பு தேசிய பாதுகாப்பு தின அனுஷ்டிப்பு நிகழ்வு!



சுனாமி அனர்த்தம் ஏற்றுபட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு அரசாங்கத்தின் அறிவுறுத்தலில் மாவட்டம் தோறும் நடைபெறும் தேசிய பாதுகாப்பு தினஅனுஷ்டிப்பு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது .மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுனாமியில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மாசாந்தியடையவும் அவர்களின் உறவினர்களின் நலன்வேண்டியும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருந்ததுடன் பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன .

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் இந்நிலையத்தின் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் சுனாமி அனர்த்தம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அனர்த்தங்களின் முன்னேற்பாடுகள் மற்றும் தாக்கங் களிலிருந்து வெளியேறும் முறைகள் பற்றியும் செயல் முறையிலான விளக்கவுரை நடாத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூப ரஞ்சனி முகுந்தன்,பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன்,திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலாபுண்ணியமூர்த்தி உட்பட பல பிரமுகர்கள் பிரசன்ன மாகி யிருந்தனர்.