தேசிய சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதிப் பதக்கத் தேர்வில் மட்டக்களப்பு மேற்கு வலய மாணவர்கள் சாதனை: வலயக்கல்விப் பணிப்பாளரால் கௌரவிப்பு

 தேசிய சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதிப் பதக்கத்திற்கான இறுதித் தேர்வில் சித்தி பெற்று சாதனை படைத்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்கள் ஐவர், வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளினால் இன்று (11) புதன்கிழமை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


 குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் இடம்பெற்ற அதிபர்கள் ஒன்றுகூடலின் போதே இந்த விசேட பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.


இத்தேர்வில் குறித்த பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் விசேட சித்தியையும், இரண்டு மாணவர்கள் திறமைச் சித்தியையும் பெற்று வலயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த ஐந்து மாணவர்களுடன் இணைந்து, அவர்களை வழிநடத்திய சுற்றாடல் அதிகாரி திருமதி. காயத்திரி சிறிவித்தியன், பாடசாலை அதிபர் மற்றும் பொறுப்பாசிரியர் ஆகியோருக்கும் இதன்போது மாலை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் மாணவர்கள் தங்களது சாதனைப் பயணம் குறித்த அனுபவங்களை ஏனைய அதிபர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர். இம்மாணவர்களின் இச்சாதனை வலயத்திலுள்ள ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்திருப்பதாக இதன்போது அதிகாரிகளினால் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

வலயக்கல்விப் பணிப் பாளர் சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப் பாளர்கள், அதிபர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.