கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோயை கட்டுபடுத்த வீடு வீடாக விஷேட சோதனை

(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பான கல்முனை பாண்டிருப்பு எல்லையில் அமைந்துள்ள பகுதியில் வீடு வீடாக குறித்த சோதனை நடவடிக்கையை மேற் கொள்ளப்பட்டது.

கல்முனை வடக்கு பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்பின் பேரில் பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.தஸ்ரிம் , கல்முனை சுற்று சூழல் பாதுகாப்பு பொலிஸ், கடற்படையினரும் இணைந்து திங்கட்கிழமை(2) காலை முதல் மணிக்கு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தினை தொடர்ந்து பாண்டிருப்பு கிராமத்திலுள்ள வீடு வீடாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் இவ் வேலைத்திட்டம் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலய பாடசாலையில் இருந்து ஆரம்பித்து, பாண்டிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் குறித்தும் பொது சுகாதார பரிசோதகர் மக்களை தெளிவு படுத்தினார்.

கல்முனை சுகாதார வைத்திய பிரிவில் உள்ள பாண்டிருப்பு கிராமத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயினால் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்றது.கல்முனை பிராந்தியத்தில் இது வரைக்கும் 726 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாண்டிருப்பு பிரதேசத்தில் இது வரைக்கும் 30 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனினும் எந்தவிதமான உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை.நாடு பூராகவும் டெங்கு நோயினால் 72764 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரைக்கும் 78 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.