இவ்வருட இறுதிக்குள் 2500 பஸ்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!


இவ்வருட இறுதிக்குள் 2500 பஸ்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமாக 6000ம் பஸ்கள் தற்போதுள்ள போதிலும் அவற்றில் கோளாறுகளின்றி செலுத்தக்கூடியவையாக 2000ம் பஸ்களே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மீதொட்டமுல்ல பஸ் டிப்போவை சோதனைக்கு உட்படுத்திய போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர,

மீதொட்டமுல்ல பஸ் டிப்போவில் 75 பஸ்கள் உள்ளன. ஆனால், 50 பஸ்கள்தான் அதில் போக்குவரத்தில் ஈடுபடக்கூடியவையாக உள்ளன. அதிலும் சாரதிகள் மற்றும் நடத்துநர் பற்றாக்குறை காரணமாக 29 அல்லது 30 பஸ்களே தினமும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன.

பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் காரணமாக சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களை உடனடியாக இடைநிறுத்துமாறு போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கட்டடங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளது. 500 பஸ்களை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை கடந்தவாரம் அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் 400 பஸ்கள் 36-56 இக்கும் இடைப்பட்ட ஆசனங்களைக் கொண்டவையாகும். 100 பஸ்கள் 26 ஆசனங்களைக் கொண்டவையாகும். அத்துடன், நகர பிரதேசங்கள் முழுமையாக கார்ப்பட் இடப்படும் பட்சத்தில் மேலும் 2000ம் மிதிப்படுகை பஸ்களை இந்த வருடத்திற்குள் இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

எமது நாட்டில் தற்போது பாவனையில் உள்ள பெரும்பான்மையானவை பஸ்கள் அல்ல. லொறிகளின் அடிச்சட்டத்துக்கு பஸ்களின் மேற்பாகங்களே பொருத்தப்பட்டுள்ளவையாகும். அதனடிப்படையில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு இவ்வருட இறுதிக்குள் 2500 பஸ்களை இணைப்பதே எமது இலக்காகும் என்றார்.