கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவித்தல்!


சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், தடிமல், சுவாசிப்பதில் சிரமம், இயற்கை கழிவு நீராக வெளியேறுதல். தலைவலி, தொண்டையில் வலி , உடம்பு வலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.

இவை ஏற்படும் பட்சத்தில் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த புதிய கொரோனா வைரசினால் பாதிப்பு ஏற்பட்டால் நிமோனியா காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட மோசமான நிலைமை ஏற்படக்கூடும். புதிய வைரசின் தாக்கத்தை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் சகாதார அதிகாரிகள் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுதல் அல்லது விசக்கிருமிகளை அழிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்துதல், இருமல் மற்றும் தும்மலின் போது கைக்குட்டையை பயன்படுத்துதல், பயன்படுத்திய ஸ்ரிசுவை உரிய கழிவு தொட்டியில் போடுதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இருமல் அல்லது தும்மலின் போது கைக்குட்டை அல்லது ஸ்ரிசுவை பயன்படுத்த முடியாத சந்தர்ப்பத்தில் அருகில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை மேற்கொள்ள வேண்டும். தும்மும் போழுது கைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய வைரசின் தாக்கத்தை தவிர்க்க வேண்டுமாயின் காய்ச்சல் மற்றும் மூக்கில் நீர்வடியும் நபர்களுடன் செயற்படுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

இதேபோன்று உணவு வகைகளை தயாரிக்கும் போது முட்டை, இறச்சி போன்றவற்றை உரிய முறையில் சமைப்பது மிகவும் முக்கியமாதாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கால்நடைப் பண்ணைகளில் பணியாற்றும் போது பாதுகாப்பாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு அத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு அறிவித்துள்ளது.

விசேடமாக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் கையுறை, முக கவசம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.