மட்டு மாநகரில் தமிழ்ச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவும் சிறப்பு மலர் வெளியீடும்

    Ravindramoorthy

ஐம்பது ஆண்டுகளையும் விஞ்சி 'தரணி போற்றத் தமிழ் செய்வோம்' என்ற மகுட வாசகத்தோடு தமிழ்ப்பணியாற்றிவரும் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் தனக்கென்றதோர் கட்டடத்தை தன்னகத்தே கொண்டு விளங்கப்போகிறது. 

மாசித் திங்கள் 15ஆம் நாள் சனிக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு அக்கட்டம் கோலாகலமான முறையில் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.

மிக நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த அதீத முயற்சி இன்று கைகூடியுள்ளது. மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் தமிழர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய அத்தியாயமொன்று பொன்னெழுத்துக்களால் தீட்டப்படுகின்றது.

இதற்குமுன்பு தமிழ்ச் சங்கத்தை முன்னெடுத்து வந்த நிர்வாகங்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தபோதும் தற்பொழுது சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி தலைமையிலான நிர்வாகத்தினருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியென்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.

தனமும், மனமும் தன்னகத்தே நிரம்பப்பெற்ற தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் 14 பேர் ஒன்றுகூடி சங்கப் பொருளாளர் தேசபந்து மு. செல்வராஜா தலைமையில் ரூபா இண்டு கோடிக்கு மேற்பட்ட மதிப்பீட்டிலான திட்டத்துடன் மனம்கொண்ட அற்புதக் கொடையின் வெளிப்பாடே இக்கட்டமாகும்.

தமிழ்மொழியின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் அழகுற இம்மண்டபம் மட்டக்களப்பு நகரிற்கு வடக்கே 2 கி.மீ. தூரத்தில் திருமலை வீதியில் பிள்ளையாரடி எனும் தமிழர் பூர்வீக மண்ணில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சைப் பெரிய கோயிலை நமக்களித்த பெருவுடையான் இராஜராஜ சோழன் காட்டிய வழியில் இப்பெரும் கட்டத்தை ஈந்து உவந்த அப்பெரும் கொடையாளிகள் பதினான்கு பெருமக்களையும எமது மக்கள் நன்றியுணர்வோடு பாராட்டுகிறார்கள்.

திறப்பு விழா நாளன்று இதன் நினைவாக சிறப்பு மலரொன்றும் வெளியிடப்படவிருக்கின்றது. தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தேசியக் கலைஞர் கவிக்கோ வெல்லவூர்க்கோபால் அவர்களை ஆசிரியராகக் கொண்ட மலர்க்குழு தமிழ்ச் சங்கத்தின் வரலாற்று ஆவணமாக இம்மலரினை மிகவும் சிறப்பான முறையில் படைத்துள்ளார்கள்.

கட்டம் அமைவதென்றால் அதற்குப் பொருத்தமானதொரு இடத்தில் காணி பெறப்படுதல் வேண்டும். 1969 களிலிருந்தே காணி தேடும் படலம் தொடங்கிற்று. அம்பாறைக் கச்சேரியில் பணியாற்றிய பெரிய கல்லாற்றைச் சேர்ந்த திரு. கிறிஸ்ற்றி செல்லப்பா அவர்களால் களுவாஞ்சிக்குடியில் ஒரு காணித்துண்டு சங்கப் பணிமனை மற்றும், சபா மண்டபம் அமைந்திட அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இருந்தபோதும் அங்கு கட்டடம் அமைக்கும் பணி சாத்தியப்படவில்லை.

2010களில் மீண்டும் காணி தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய நிர்வாகத்தின் தீவிர முயற்சியின் பயனாக நாவற்குடாவில் காணி பெறப்பட்டது. அங்கு கட்டத்திற்கான கல் நாட்டு விழாவும் இடம்பெற்றது. இடத்தின் பொருத்தப்பாடு காரணமாக அங்கும் கட்ட நிர்மாண முயற்சி தொடரமுடியாமல் போனது.
அதன்பின்பு முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு. மா. உதயகுமார் அவர்கள் மாநகரசபை ஆணையாளராக பணிபுரிந்தபோது மட்டக்களப்பு வாவிக்கரைப் பூங்காவிற்கு முன்பாக காணி வழங்கப்பட்டு அங்கு பூமி பூஜையும் இடம்பெற்றபோதும் அங்கும் அக்காரியம் முன்னெடுக்கப்பட முடியாதுபோனபோது மாநகர ஆணையாளரது தொடர் முயற்சியின் பயனாக மட்டக்களப்பு திருமலை வீதியில் பிள்ளையாரடி எனும் தமிழர் பூர்வீக பூமியில் காணி வழங்கப்பட்டது.

அப்போதைய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி மு. கணேசராசா அவர்களதும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சராகவிருந்த திரு. கி. துரைராசசிங்கம் அவர்களின் தீவிர முயற்சியினாலும் அக்காணி நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

அக்காணியை உத்தியோகபூர்வமாக கையேற்கும் நினைவாக தமிழ் நாட்டில் வதியும் தமிழ் பற்றாளரும் பிரபல்யமிகுந்த வணிகருமான திரு. சந்தோஸ் அவர்களினால் வழங்கப்பட்ட திருவள்ளுவரின் திருவுருவச் சிலை காணி முன்றலில் நிர்மாணிக்கப்பட்டு கோலாகலமான முறையில் தமிழகத்திலிருந்து வருகை தந்த திரு. சந்தோஸ் அவர்கள் தலைமையிலான குழுவினர் பிரசன்னத்தில் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு அழகுற அமைக்கப்பட்டிருக்கும் கட்டமும் அதன் முன்றலில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் திருவள்ளுவரின் திருவுருவச் சிலையும் மட்டக்களப்பு நகரின் நுழைவாசலில் அமைந்திருப்பது மட்டக்களப்பிற்கு பெருமை சேர்ப்பனவாக பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவ்வேளையில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுவது சாலப்பொருத்தமாகும்.

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் கிழக்கிலங்கையின் தமிழறிஞர்கள், இலக்கிய கர்த்தாக்கள் மற்றும் தமிழார்வலர்கள் ஆகியோரின் ஏகோபித்த ஆதரவுடன் நிறுவப்பட்டதாகும்.

1967.11.01 தீபாவளி தினத்தில் இதன் அங்குராப்பண நிகழ்வு இடம்பெற்றது.

பட்டிருப்பு மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அன்றைய மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு. செ. கதிர்காமநாதன் தலைமை தாங்கியிருந்தார். இதன்போது காப்பாளர்களாக அரச அதிபர் திரு. செ. கதிர்காமநாதன், பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சீ.மு. இராசமாணிக்கம் ஆசிரிய சிரோண்மணி திரு.வே. சாமித்தம்பி ஆகியோரும் தலைவராக புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களும் தெரிவாகியிருந்தனர்.

அதன்பொதுச் செயலாளராக வித்துவான் க.செபரெத்தினம் அவர்களும், பொருளாளராக பிரசித்த நொத்தாரிஸ் பண்டிதர் க. தம்பிப்பிள்ளை அவர்களும் தெரிவாகினர்.

சங்கச் செயற்குழு உறுப்பினராக வித்துவான் எப்வ்.எக்ஸ். சி. நடராசா, பண்டிதர் செ. பூபாலபிள்ளை, பண்டிதர் ஆ. சபாபதி, பண்டிதர் விசுவலிங்கம், பண்டிதர் ந. அழகேசமுதலி, பண்டிதர் சைவப்புலவர் வி.ரி. செல்லத்துரை, அன்புமணி இரா. நாகலிங்கம், எழுத்தாளர் ரி. பாக்கியநாயகம், திரு. மூனாகானா (மு. கணபதிப்பிள்ளை), அருள் செல்வநாயகம், மண்டூர் புலவர் மு. சோமசுந்தரம்பிள்ளை, வித்துவான் சா.இ. கமலநாதன், வே. சிவசுப்பிரமணியம், ஆசிரிய சிரோண்மணி த. செல்வநாயகம் எனப் பதினைந்து தமிழறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் மேற்கொண்ட பணிகள் தொடர்பில் வித்துவான் க. செபரெத்தினம் அவர்களால் எழுதப்பட்டு 2009 இல் கனடாவில் வெளிவந்த 'நினைவில் நிறைந்தவை' எனும் நூல் எடுத்தியம்புகின்றது.
சுமார் 30 ஆண்டுகளாக அக்காலத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால் தமிழ்ச் சங்கம் தனது பணிகளைத் தொடர முடியாமல் போயிற்று.

இதன்பின்பு 2003 காலப்பகுதியில் புனரமைப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. நிர்வாகங்களும் தெரிவுசெய்யப்பட்டபோதும் அக்காலச் சூழலில் அது முழுமை பெறவில்லை.

இத்தகைய பின்னணியில் இதன் நிறுவனர்களில் ஒருவரான கனடாவில் வாழ்ந்துகொண்டிருந்த வித்துவான் தமிழ்மொழி க. செபரெத்தினம் அவர்கள் மீளவும் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தை கட்டியெழுப்பத் திடசங்கற்பம் பூண்டவராக 2010 புரட்டாதியில் நாட்டுக்கு வருகை தந்து இங்குள்ள தமிழ் ஆர்வலர்களுடன் மிகநெருக்கமாகத் தொடர்பு கொண்டு முழுமூச்சுடன் ஈடுபட்டார்.

அவ்வாறு புனரமைக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்ப் பணிகளோடு, மேற்படி காணி, கட்டம் தொடர்பான செயற்பாடுகளும் இனிதே தொடர்ந்தன.

அனைத்து நிர்வாகங்களின் அவ்வப்போதைய முயற்சியின் பெரும் பயனே இன்று நாம் திறந்து வைக்கப்படவிருக்கும் தமிழ்ச் சங்கக் கட்டமாகும்.

இதில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் யாதெனில், கடந்த 1967 இல் தொடங்கப்பட்ட மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு கட்டம் இல்லாதிருந்த பெரும் குறையானது தற்போது தீர்த்துவைக்கப்பட்டுள்ளமை அனைவரையும் புளங்காகிதமடையச் செய்வதாக அமையும். இதற்காக முன்னின்றுழைத்த அனைத்துச் செயற்பாட்டாளர்களுக்கும் குறிப்பாக கட்ட குழுவின் தலைவராக மிக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தேசபந்து – சங்கப் பொருளாளர் திரு. முத்துக்குமார் செல்வராசா அவர்கள் மற்றும் இதன் கொடையாளர்கள் தமிழ்ச் சங்கத்தின் தலைவரான சைவப்புரவலர் தேசகீர்த்தி வினாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி, திரு. செல்லத்துரை அமிர்தலிங்கம், திரு. ஆறுமுகம் இராஜேந்திரன், திரு. சண்முகம் சிவபாதசுந்தரம், திரு. நடனபாதம் ஜெகதீசன், திரு. கறுப்பையாபிள்ளை செல்வநாயகம், திரு. சுப்பையா யோகேஸ்வரன், திரு. செல்வநாயகம் நடேசமூர்த்தி, திரு. பஞ்சாட்சரம் சாந்தகுமார் (அமரர் சி.த. பஞ்சாட்சரம் அவர்களின் நினைவாக) திரு. பால்ராஜ் செல்வராஜ், திரு. கணபதிப்பிள்ளை சுரேஸ், திரு. சண்முகம் சண்முகசேகர், திரு. தங்கராஜா கிரிதரராஜா ஆகிய பெருமதிப்புக்குரிய வர்த்தக சங்க உறுப்பினர்களை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் பெருமையுடன் நினைவு கூருகின்றது.

இன்று இருநூற்றுக்கும் அதிகமான தமிழ் ஆர்வலர்களை தனது உறுப்பினர்களாகக் கொண்டு தலைவிருட்சமாக கிளைபரப்பி நிற்கும் எமது சங்கம் அதன் தலையாய பணிகளை தடையின்றி தொடர அனைவரும் கைகொடுப்போம்.

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் காலப் பணிசெய்தே நிலைக்குமிவ் வையகத்தே நீடு!

திரு. வே. தவராஜா
செயலாளர்,
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம்