எரிபொருள் விலை, நீர் கட்டணம் அதிகரிக்கப்படலாம் !


தேர்தலின் பின்னர் எரிபொருள் விலையை 30 வீதத்தாலும் நீர் கட்டணத்தை 20 வீதத்தாலும் அரசாங்கம் அதிகரிக்கும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இராஜகிரியவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தேசிய ஊழியர் சங்கம் இது தொடர்பில் தௌிவூட்டியது. தேசிய ஊழியர் சங்கத்தின் உப அமைப்பாளர் ஆனந்த பாலித்த பின்வருமாறு தௌிவுபடுத்தினார்,

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை துரிதமாக குறைவடைந்துள்ளது. விலைச்சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால், 11 ரூபாவால் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை குறைத்திருக்க முடியும். ஒரு லிட்டர் 92 ரக ஒக்டேன் பெட்ரோலுக்கு அரசாங்கம் தற்போது 55 ரூபாவை வரியாக அறவிடுகின்றது. ஒரு லிட்டர் 95 ரக சுப்பர் டீசலுக்கு 68 ரூபாவை வரியாக அறவிடுகின்றது. சாதாரண டீசலுக்காக 15 ரூபா வரியை அறவிடுகின்றது. 

ஒரு லிட்டர் சுப்பர் டீசலுக்கு 35 ரூபாவைப் பெறுகின்றது. விலைகள் தொடர்பான தகவல்கள் தற்போது பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மஹிந்த ராஜபக்ஸ விலைச்சூத்திரத்தை இரத்து செய்தார். அதனை இரத்து செய்து விட்டு இந்தியன் லங்கா ஒயில் நிறுவனத்திற்கு 8 வீத வங்கி முறிகள் விநியோகத்தின் ஊடாக 11,000 மில்லியனை செலுத்தினார்கள். அதற்கு பதிலாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அரசாங்கம் செலுத்த வேண்டிய 34,000 மில்லியனில் ஒரு சதத்தையேனும் வழங்கவில்லை. தேர்தல் நிறைவு பெறும் வரையிலேயே அரசாங்கம் இவ்வாறு செயற்படும், என ஆனந்த பாலித்த குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை 30 வீதத்தாலும் நீர் கட்டணம் 20 வீதத்தாலும் அதிகரிக்கப்படும் என்ற முன்னெச்சரிக்கையை வாசுதேவ நாணயக்கார விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.