கொரோனா தொற்றை தடுப்பதற்கு அரசு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் - வி.ஜெகதீசன்

(வி.சுகிர்தகுமார்) 
கொரோனா தொற்றுநோயை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டிலிருந்து கொரேனாவை முற்றாக ஒழிக்க முடியும் என அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்கான உதவியினை மேற்கொண்டுவரும் அன்புக்கரங்கள் போன்ற அமைப்பினரையும் பாராட்டுவதாக கூறினார்.

இதேநேரம் மாவட்டத்தில் வாழும் மக்களின் நலன்கருதி அத்தியாவசியப்பொருட்களை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடக்கம் பல்வேறு பணிகளை மாவட்ட செயலகமும் நாளாந்தம் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அன்புக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சமூகநேயன் வே.வாமதேவனினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட உலர் உணவுப்பொருட்கள் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தின் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதனின் அனுமதியுடன் இடம்பெற்ற உலர் உணவுபொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் மற்றும் கிராம உத்தியோகத்தர் பி.கிருசாந்தன் உள்ளிட்ட அன்புக்கரங்கள் அமைப்பினர் கிராமத்தின் நலன் விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் அச்சத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அன்றாட தொழிலாளர்கள் மற்றும் வருமானம் குறைந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மக்கள் அன்றாட தொழிலுக்கு செல்லமுடியாத நிலையில் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் அவர்களது உணவுத்தேவையினை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையும் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு சமூக அமைப்புக்களும் நலன் விரும்பிகளும் இணைந்து குறித்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கும் பணியை கொடையாளர்களின் உதவியுடன் நாடாளவிய ரீதியில் மனிதாபிமான முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேத்தில் ஒன்றிணைந்த அன்புக்கரங்கள் எனும் குழுவினர் சில நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட உலர் உணவினை பொதி செய்து மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

நேற்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பணிக்கு பல உதவிக்கரங்களின் கைகள் உதவி செய்து வருவதுடன் இக்கட்டான இச்சூழ்நிலையிலும் இப்பணியில் இணைந்து கொண்ட அனைவருக்கும் அன்புக்கரங்கள் குழுவினர் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டனர்.