ஊரடங்கு சட்டம் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள நிலையில்; மக்களுக்கான அறிவுறுத்தல்கள்


கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.


குறித்த மாவட்டங்களில் நாளை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.




புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் நாளை மறுதினம் காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் அனைத்து மாவட்டங்களையும் ​சேர்ந்த விவசாயிகள் எவ்வித தடையும் இன்றி, தமது பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள், மரக்கறி, மீன், இறைச்சி மற்றும் மருந்து வகைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொலிஸ் அவசர அழைப்பு பிரிவின் 119 மற்றும் 0112 44 44 80, 0112 44 44 81 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மக்கள் தகவல்களை வழங்க முடியும்.

மக்களுக்கு எழுகின்ற சுகாதாரப் பிரச்சினைகள், மின்சார துண்டிப்பு, நீர் விநியோக துண்டிப்பு உள்ளிட்ட பொது பிரச்சினைகள் தொடர்பில் இந்த இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.

மக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.