ஊரடங்கை தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு


கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

ஏனைய 19 மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது – என்றுள்ளது.