5 அடிவரை வளர்ந்தும் அறுவடை செய்ய முடியாத பொன்னாங்கணி கீரை

(வி.சுகிர்தகுமார்) 
அம்பாரை மாவட்டமானது பயிர்ச்செய்கையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் பிரதேசமாக மாறிவருகின்றது. ஆனாலும் பயிர்ச்செய்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்களை சந்தையில் விற்பனை செய்ய முடியாத நிலையும் உருவாகி வருகின்றது.
மேலும் அவர்களது உற்பத்திகளுக்கு தகுந்த விலை கிடைக்காமையினால் பயிர்ச்செய்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பொன்னாங்கணி செய்கைக்கு பெயர் பெற்ற அக்கரைப்பற்று தீவுக்காலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பொன்னாங்கணி அறுவடை செய்ய முடியாமல் 5 அடிவரை வளர்ந்துள்ளதாக பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாரை மாவட்டம் முழுவதிற்குமான விநியோகத்தை மேற்கொண்ட பொன்னாங்கணி கீரை வகையானது உள்ளுரில் கூட விற்பனை செய்ய முடியாதுள்ளதுடன்; அறுவடை கைவிடப்பட்டதன் காரணமாக காடுபோல் வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

நாளாந்தம் 500 தொடக்கம் 600 கட்டு வரை விற்பனை செய்த பொன்னாங்கணி தற்போது 70 கட்டுவரையில் விற்பனை செய்வதாகவும் குறிப்பிட்டனர். மீதமானவை கால்நடைகளுக்கே வழங்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டனர்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சம் காரணமாகவே தமக்கு இந்த நிலை உருவானதாகவும் கூறுகின்றனர்.

இது தொடர்பில் விவசாயத்திணைக்களத்திற்கும் அறிவித்துள்ளதாகவும் அவர்கள் பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் கூறும் பயிர்ச்செய்கையாளர்கள் அரசாங்கம் தமக்கான உரிய நட்ட ஈட்டை பெற்றுக்கொடுத்து எதிர்கலத்திலும் தமது தொழிலை தடையின்றி மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலை தொடர்பில் அம்பாரை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் கரையோரப்பிரதேச சிரேஸ்ட விவசாயப்போதனாசிரியர் ஏ.ஜ.ஏ.பெறோஸிடம் நாம் கேட்ட போது இவ்வாறு கூறினார். 

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் குறித்த பகுதியில் சுமார் 20 வருடங்களாக பொன்னாங்கணி செய்கை பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக விவசாயிகளின் உற்பத்தியை அறுவடை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அத்தோடு சிறந்த விலைக்கும் விற்பனை செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர். இது தொடர்பில் எங்களை அணுகிய பயிர்ச்செய்கையாளர்கள் மாற்று வழி தொடர்பில் கேட்டனர்.

இதனை அடுத்து கள விஜயத்தினை மேற்கொண்ட நாம் நிலமை தொடர்பில் நேரில் கண்டறிந்ததுடன் அறுவடை செய்ய முடியாமல் போன பொன்னாங்கணி பூத்துக்குலுங்குவதையும் அவதானித்தோம். விற்பனை செய்ய முடியாத பொன்னாங்கணியை சுழற்ச்சி முறை பயிர்ச்செய்கை எனும் முறையில் கால்நடைகளுக்கு உணவாக வழங்க ஆலோசனை வழங்கினோம் என்றார்.