மலையகம் நோக்கிய சுயதொழில் வேலைவாய்ப்புத் திட்டம் எனும் தலைப்பில் கருத்தரங்கு

(கதிரவன்)
நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஹற்றன் கேகஸ் ஹோல்ட் தோட்டம் - டின்சின் பொகவந்தலாவ என்னும் இடத்தில் அன்பேசிவம் சிவனருட்சபையால் அறநெறி மற்றும் சுயதொழில் வேலைவாய்ப்புத் திட்டம் என்னும் தலைப்பில் கருத்தரங்கு இடம் பெற்றது.

திருகோணமலை தென்கயிலைஆதீனத்தின் தாய்ச்சபையான, அன்பேசிவம் சிவனருட்சபையால் அறிமுகப்படுத்தப்படவுள்ள பல திட்டங்களில் ஒன்றான மலையகம் நோக்கிய சுயதொழில் வேலைவாய்ப்புத்திட்டக் கருத்தரங்கில் 50 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கு பலராலும் பாராட்டத்க விதத்தில் அமைந்தது.


நிகழ்வில் முதலாவதாக மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம் பெற்றது. கோயில் தர்மகர்த்தா திரு.ரவீந்திரன், உதவிக்கல்விப் பணிப்பாளரும், அன்பே சிவம்,சிவனருட்சபையின் ஹற்றன் வலயத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.சாந்தகுமார், அன்பேசிவம் சிவனருட்சபையின் சுயதொழில் வேலைவாய்ப்புத்திட்ட ஆலோசகர் திருமதி வோகேஷ்வரி, அறநெறிப் பள்ளி ஆசிரியர் திருமதி இந்திரா ஆகியோர் மங்கள விளக்கு ஏற்றினார்கள். பின்னர் அறநெறிப்பள்ளி ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் கடவுள் வாழ்த்து பாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மலையகத்திற்கான, அன்பேசிவம் சிவனருட்சபையின் ஒருங்கிணைப்பாளர் திரு.திவாகர் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். வரவேற்புரையைத் தொடரந்து பேசிய திரு.திவாகர் அவர்கள் தென்கயிலை ஆதீனத்தின் தாய்ச்சபையான அன்பேசிவம் சிவனருட்சபையின் திட்டங்கள் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். அறிநெறி சார்ந்தும், சமுதாயம் தழுவிய ஆன்மீகம் சார்ந்தும் செய்யவிருக்கும் நடவடிக்கைகளை தெரிவித்த அவர் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் அறநெறிப்பள்ளி மாணவச் செல்வங்கள் ஒவ்வொருக்கும் தனியாக வங்கியில் சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து கொடுக்கும் அரிய திட்டத்தையும் விளக்கிக் கூறினார்.

அடுத்து, பிரான்சிலிருந்து தென்கயிலை ஆதீனத்தின் அனைத்துலக ஒருங்கிணைப்பாளரும், அன்பேசிவம் சிவனருட்சபையின் பொதுச் செயலாளருமான தென்கயிலை சிவா அவர்கள் ஒலி வடிவில் உரை பதிவு செய்து அனுப்பிய செய்தியில் மலையகம், வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு தமது செயற்பாட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உருவாக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய வலைப்பின்னல் கொண்ட நிர்வாக ஒழுங்குகளை விளக்கினார். அத்துடன் தமது ஓரே நோக்கம் பரந்து விரிந்த நிலையில் தமது தென்கயிலை ஆதீனமும், தாயச்சபையான அன்பேசிவம் சிவனருட்சபையும் ஆன்மீக ரீதியில் சமூகமட்டத்தில் சைவ அறநெறியோடு வாழ வழியேற்படுத்திக் கொடுப்பதே தமது தலையாய கடமையெனக்கூறினார் .

இனமத வேறுபாடின்றி கொரோனா தொற்றுக் காலத்தில் நிவாரணப் பணிகளைச் செய்த எமது தென்கயிலை ஆதீனமானது தனது ஆன்மீகச் செயற்பாடுகளை விரிவுபடுத்த மலையக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் விரைவில் தென்கயிலை ஆதீனம் மலையகம் என்னும் கிளை ஆரம்பிக்கப்படும் என்னும் நற்செய்தியையும் தெரிவித்திருந்தார். அத்துடன் நிறைய திட்டங்களை வெளிப்படுத்திய அவர், மக்களுக்குண்டான ஆரோக்கியம் சார்ந்த நீரிழிவு விழிப்புணர்வுப் பட்டறைப் பயிற்சி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தார். மேற்படி உரை அடங்கிய வடிவம் இணையத்தடங்கல் காரணமாக ஒலிபரப்பு செய்யமுடியாத நிலையில் கைத்தொலைபேசியூடாக பரிமாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, உதவிக் கல்விப் பணிப்பாளரும், அன்பே சிவம் சிவனருட்சபையின் ஹற்றன் வலயத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு.சாந்தகுமார் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். உரையின் தொடராக அவரின் தலைமையில் கருத்தரங்கு இடம் பெற்றது. கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசிய திரு.சாந்தகுமார் அவர்கள் அறநெறி சார்ந்தும் சமுதாயம் சார்ந்தும் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலகட்டம் இதுவென்றும், அறநெறிப்பள்ளிகளை ஆரம்பித்து மாணவர்களுக்கு போதிய ஆன்மீக, சமுதாய அறிவைப் பெருக்க வேண்டும் என்ற பொருள்படப் பேசினார். நமது முன்னோர்களும் மூதாதையர்களும் வாழ்ந்த அறநெறிவாழ்வை அதற்குப் பின் வழிவந்த எமது பெற்றோர்களும் அறநெறி வாழ்வோடு பின்னிப்பிணைந்து கடைப்பிடித்து வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளார்கள். எமது தமிழர் வாழ்வென்பது அறநெறி தவறாத வாழ்வு. ஆகவே எதிர்காலச்சந்ததியாகிய மாணவர்களுக்கு, இளம் சமுதாயத்தினருக்கு அறநெறி சார்ந்த விடயங்களை கற்றுக் கொடுக்க வேண்டிய பெரும் கடமைப்பாட்டடில் நாம் எல்லோரும் இருக்கின்றோம்.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வசதியின் காரணமாக நிறைய தீமையான எண்ணங்களை கருத்துக்களை இணையவழியூடாக பரப்புகின்ற ஒரு ஆபத்தான சூழலை எதிர் கொண்டுள்ளோம், அதிலிருந்து காப்பாற்ற நாம் செயற்பட வேண்டும். அதனைக் கருத்தில் கொண்டு அறநெறி சார்ந்த, ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களையும் எண்ணங்களையும் மாணவ சமுதாயத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். முதலில் நாம் அனைத்து இடங்களிலும் அதற்கு முன்மாதிரியாக அறநெறிப்பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் . இதே வேளை அன்பேசிவம் சிவனருட்சபை மலையகம் நோக்கி முன் வைக்கின்ற ஒவ்வொரு திட்டங்களுக்கும் நாம் ஒருமித்து ஆதரவு கொடுத்து நம்மை நாமே பலப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடந்து, சைவநெறி ஆசிரிய ஆலோசகரும், அன்பேசிவம் சிவனருட்சபையின் ஹற்றன் வலய உதவி ஒருங்கிணைப்பாளருமான திருமதி.தமையந்தி அவர்கள் மலையக சமுதாயம், பொருளாதாரம், கல்வி, ஆன்மீகம் ஆகியவற்றில் முன்னிலை வகிக்க அனைவரும் பாடுபட வேண்டுமெனவும், கோரோனா தொற்றுக்குப் பின்னரான இக்காலப்பகுதியில் நாம் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்ட அவர், அன்பேசிவம் சிவனருட்சபையின் திட்டங்களை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் ஆதரவு கொடுத்து செயற்படுவது பற்றியும் தெரிவித்தார்.

கருத்தரங்கில் இறுதியாகப் பேசிய அன்பேசிவம் சிவனருட்சபையின் சுயதொழில் வேலைவாய்ப்புத்திட்ட ஆலோசகர் திருமதி.லோகேஷ்வரி அவர்கள் சுயதொழில் வேலைவாய்ப்புத் திட்டத்தின் அவசியத்தையும், மலையக சமூகத்தினருக்கு இன்று முக்கியமாக தேவைப்படும் தேவைகள் குறித்தும் விரிவாக விளக்கினார். மலையக மக்களைச் சூழவுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாம் நிறையத் திட்டங்களை மேலும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அதற்கு தன்னால் இயன்றளவு முயற்சிகளை செய்து தொழிற்பயிற்சிகளை உருவாக்கிக் கொடுத்து இந்த சுயதொழில் வேலைவாய்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வருவதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக அறநெறி ஆசிரியர் திருமதி இந்திரா அவர்கள் அன்பேசிவம் சிவனருட்சபைக்கு நன்றி தெரிவித்து பேசியதைத் தொடர்ந்து, திரு.திவாகர் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.