மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிடின் TNAவின் ஆதரவு பெறுவீர்களா? மஹிந்த பதில்
விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் அண்மையில் அம்பாறை பிரதேசத்தில் வைத்து தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பிரதமர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருணா அம்மானின் கருத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவரது கருத்து தொடர்பில் தற்போது குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகிழக்குப் பகுதிகளில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தது தனது தலைமையிலான அரசாங்கமே எனவும் கடந்த ஐந்து வருடங்களில் அபிவிருத்தி இன்றி குறித்த பிரதேசமும் நாடும் பின்னோக்கி பயணித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கு செய்த அபிவிருத்தி ஒன்றுமில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"ஏதாவது ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு அரசியல் ரீதியாக முன்வைத்து வந்தார்களே தவிர மக்களுக்கு மாகாணத்திற்கு செய்த அபிவிருத்தி ஒன்றுமில்லை. ஊடகங்களும் அந்த விடயங்களை தூக்கிப்பிடித்துக் கொண்டு இருந்ததே தவிர குறை நிறைகளை சுட்டிக்காட்டி மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டதாக நான் நம்புகிறேன்" என பிரதமர் கூறினார்.
இதேவேளை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை எதிர்பார்க்கிறீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது அது அப்போது பார்த்துக் கொள்ளலாம் என பிரதமர் பதிலளித்துள்ளார்.