அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்


(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான டப்ளியூ.டி.வீரசிங்க, கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் ஆகியோரின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், இணைத்தலைவர்களின் உரையையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடத்துதல் தொடர்பான வழிகாட்டி கோவை முன்வைத்தலும் அனுமதித்தலும் நடைபெற்றது.

கூட்டத்தில் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன பரிபாலன இராஜாங்க அமைச்சருமான விமலவீர திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ச, பைசல் காசிம், எம்.என்.முஸாரப், த.கலையரசன் ஆகியோரும், கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாச கலபதி, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பி வணிகசிங்க, மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகளின் முதல்வர்கள், நகர சபைகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பொலிஸ், இராணுவ, கடற்படை, விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அங்கீகாரத்துக்கு வழங்கப்பட்ட செயற்திட்டங்களுக்கான அனுமதி வழங்கல், மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை முன்வைத்தல், ஆகியவற்றுடன், பிரதேச மட்டத்திலான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.

குறிப்பாக, மியாங்கொட குளம், வாய்க்கால் வழியினை மறுசீரமைப்புச் செய்தல், லாகுகலை முதல் பாணமைக்கு மாற்றுப் பாதை ஒன்றினை நிர்மாணித்தல், நிந்தவூர் கடற்கரை கடலரிப்பு தவிர்ப்பு நடவடிக்கை, அம்பாரை நகர எல்லையிலுள்ள குளத்தைச் சுற்றிய நிலங்களை விடுவித்தல், ஆலையடிவேம்பு மாவட்ட வைத்திய சாலையின் குடிநீர்ப்பிரச்சினை, கோமாரி மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை அதிகரித்தல், தீகவாபி வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் அமைத்தல், தபாலகத்தினை வேறு கட்டத்திற்கு நகர்த்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், தேசிய வீடமைப்பு அதிகார சபை மூலம் அம்பாரை மாவட்டத்தில் வீடமைப்புக் கடன்கள் வழங்கப்பட்டு அவற்றுக்கான முதலாவது கட்டக் கொடுப்பனவுகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராயப்பட்டது.