பிள்ளையானின் புதிய நியமனத்துக்கு ஏறாவூர் நகர சபையில் பாராட்டு


சிறையிலிருந்தும் மக்கள் மனதை வென்ற மக்களின் தலைவனுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமானதே என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஏறாவூர் நகர சபையின் தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபை மாதாந்த அமர்வின் அடிப்படையில் செப்டெம்பர் மாதத்திற்கான அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நகர சபையின் கேட்போர் கூடத்தில் அந்நகர சபையின் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, நகர சபையின் நானாவித நிகழ்ச்சி நிரலுடன் உறுப்பினர்களுக்கான சிறப்புரை இடம்பெற்றபோது, நகர சபைத் தலைவர் உட்பட அச்சபையின் முஸ்லிம் தமிழ் உறுப்பினர்கள் கட்சிபேதமின்றி பிள்ளையான், (சிவனேசதுரை சந்திரகாந்தன்) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதை வரவேற்று உரையாற்றினர்.

மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய சுபைர், கடந்த பொதுத் தேர்தலின்போது பிள்ளையான் எந்தவிதமான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் அதிகப்படியான வாக்குளால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் தலைவனாக திகழ்கின்றார்.

அத்தகைய ஒருவர், கிழக்கு மாகாண சபையை முதலமைச்சராக அலங்கரித்தபோது, அவர் இந்த மாகாணத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் இனவாதம் கடந்து செயற்பட்டார்.

முதலமைச்சர் காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மக்கள் உள்ளங்களிலே அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது.

இனவாதத்தை மதவாதத்தைத் தூண்டி அரசியல் செய்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே, இனவாதமற்ற ஒருவர் அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டமை அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது.

பிள்ளையான் யுத்தத்தின் கொடூரங்களை நன்கு அறிந்தவர். ஆகையினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற அபிவிருத்திப் பணிகளிலும் இனவாதம் கடந்து அவர் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குச் சேவையாற்றுவார் என்று நம்புகின்றேன்” என்றார்.