கொரோனா பரவல்: கேகாலையில் 5 கிராமங்கள் முடக்கம்


கேகாலை – ரம்புக்கன பிரதேசத்தில் 36 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அந்த பிரதேசத்திற்கு அண்மித்த 05 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி வல்கொட்டுவ, கிரிவல்லாப்பிட்டிய, அலவத்த, பில்லகும்புர மற்றும் எம்புல்அம்பே ஆகிய கிராமங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன என்று ரம்புக்கன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மெல்கம் பேட் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பெண் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி விடுமுறைப் பெற்று வீடு திரும்பிய நிலையில், 7ஆம் திகதி சுகயீனமடைந்து ரம்புக்கன வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பியிருந்தார்.

பின்னர் மீண்டும் சுகயீனமடைந்த நிலையில் அவர் 12ஆம் திகதி ரம்புக்கன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 வைரஸ் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.