பதவியேற்பினை அடுத்து மதத்தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார் அரச அதிபர் கருணாகரன்!


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
தனது பதவியேற்பினையடுத்து மதத்தலைவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறும் நோக்குடன் கல்லடி இராமகிருஷ்ன மிசன், மறைமாவட்ட ஆயர் இல்லம், ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாசல் ஆகியவற்றிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இன்று (17) மேற்கொண்டார்.

இதன்போது மட்டு.ஆஸ்ரம துணை மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் மற்றும் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் ஆகியோரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுவரும் பகவான் ஸ்ரீராமகிருஸ்ணர் கோவில் புனருத்தாரண திருப்பணிகளையும் பார்வையிட்டதுடன் சுவாமிகளுக்கான நினைவுப் பரிசினையும் வழங்கி வைத்தார்.

இதன்பின்னர் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாசலில் பள்ளிவாசல் பிரதம கதீப் மௌலவி. அல்ஹாபில் நியாஸிக்கு நினைவுப் பரிசினையும் வழங்கி வைத்தார். இதன்போது அரசாங்க அதிபர் கே. கருணாகரன் சிறப்பான நிர்வாகப் பணியினை மேற்கொள்வதற்கும், அவரது தேக ஆரோக்கியத்திற்கும் பிராத்திக்கப்பட்டது. இவ்விஜயத்தின்போது மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் பள்ளிவாயல் நிருவாகிகளுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட அரச அதிபர் கே.கருணாகரன் மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். இதன்போது  அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசொன்றும் ஆயர் பொன்னையா ஜோசப்பிற்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவ்விஜயத்தின்போது உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் கே. தயாபரன், மாவட்ட தகவல் அதிகாரி. வீ. ஜீவானந்தன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.