மாதவனை மற்றும் மயிலத்தமடு பகுதிகளில் ஏற்படும் காணி அபகரிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் - வியாழேந்திரன்


(ஏறாவூர் நிருபர் எம்.ஜி.ஏ நாஸர்)
கிழக்கு மாகாணத்தில் மாதவனை மற்றும் மயிலத்தமடு போன்ற பிரதேசங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் காணி அபகரிப்பு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்படும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.



மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் விவசாய உற்பத்திகள் விற்பனை நிலையத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் தற்போதைய அரசாங்கம் கடந்ததேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவருவதாக இதன் போது தெரிவித்தார்.

சோலை எனும் பெயரில் இந்நிலையம் மீள திறக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் எம்ஜிஏ நாஸர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையம் கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு வடக்கு விவசாய உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தலைவர் சிவநிதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இங்குமரக்கறிவகைகள், பழங்கள், காய்கறிகள் , பூக்கன்றுகள் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக பொதிசெய்யப்பட்ட உணவுப்பண்டங்கள் உள்ளிட்ட பல உற்பத்திப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் பிரதான நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்நிலையத்தில் விவசாயிகளது தகவல்களைச் சேகரித்தல், ஆலோசனை வழங்குதல், உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்குமிடையே வலைப்பின்னலை ஏற்படுத்தல் ஆகிய செயற்பாடுகளுடன் கிராமிய மட்ட விவசாய உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகள் இங்கு முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.