இலங்கையில் வல்லரசுகளின் ஆதிக்கம்: ஆபத்தில் சிக்குகிறதா தீவு நாடு?



தெற்காசியாவின் தீவு நாடான இலங்கை மீது தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வந்த பின்னணியில், அதன் மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

கோவிட்-19 வைரஸ் தாக்கம் சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் பின்னணியில் கூட சர்வதேசத்தின் நேரடி தலையீடு, இலங்கைக்குள் செலுத்தப்படுவதாகவும் கருத முடிகிறது.

கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே காணொளி ஊடாக சந்திப்பொன்று நடைபெற்றது.

அந்த சந்திப்பின்போது, இந்தியாவினால் இலங்கைக்கு பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.

அந்த சந்திப்புக்கு அடுத்த சில தினங்களிலேயே இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்த வேளையில், சீன உயர்மட்ட குழு கடந்த 8ஆம் தேதி இரவு இலங்கைக்கு அவசர பயணத்தை மேற்கொண்டது.

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தலைமையிலான குழு இலங்கைக்கு வருகை தந்தது.

அந்த குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் விசேட கலந்துரையாடல்களை கடந்த 9ஆம் தேதி நடத்தினர்.

இரு நாட்டு உறவுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், கொரோனா விவகாரங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலங்கைக்கான சீன தூதரகத்தினால் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கைக்கு 600 மில்லியன் யுவான் நிதியுதவி, சீனாவால் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கையும் இந்த நிகழ்வின்போது மேற்கொள்ளப்பட்டதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் அதிவுயர் பிரதிநிதிகள் செவ்வாக்கிழமை இரவு இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்த குழுவுக்கு அமெரிக்க செயலாளர் மைக் பொம்பேயோ தலைமை தாங்கினார். தெற்காசியாவிலன் சிறிய தீவு நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு, இரண்டு வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் அடுத்தடுத்து வந்தது, சீனாவுடன் எல்லை பிரச்னைகளால் அதனுடன் இணக்கமற்ற உறவை பராமரிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள இந்தியாவின் திடீர் இலங்கை நேசம், ராஜீய பார்வையாளர்கள் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் சீனாவின் தலையீடு இலங்கையில் அதிகமாக இருந்தன. கடந்த ஆட்சியில் இந்தியா ,அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலையீடுகள் இலங்கையில் வலுப்பெற்றிருந்தன.

இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பிறகு, அவரது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமரான நிலையில், இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இலங்கை மீதான அக்கறையின் பின்னணியை ஆராய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

இலங்கையுடன் நட்பு பாராட்டி வரும் சீனா, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பேயோவின் இலங்கை வருகையை இம்முறை வெளிப்படையாகவே விமர்சித்திருக்கிறது. இலங்கையில் உள்ள சீன தூதர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே நேரத்தில் எப்போதும் போல ஒரே நேரத்தில் அமெரிக்கா இரட்டை முகங்களை வெளிப்படுத்தி வருவதாக சாடியுள்ளார்.
வல்லரசு நாடுகளின் தலையீடு, இலங்கைக்கு எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பது தொடர்பில் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வூ பெற்ற பீடாதிபதியும், அரசியல் ஆராய்வாளருமான சிவ ராஜேந்திரன் கூறுகையில் .

இலங்கை, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதனாலேயே சர்வதேச நாடுகள் இலங்கையை தமது ஆதிக்கத்திற்குள் வைத்துக்கொள்வதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

இந்தியா இலங்கையின் நட்பு நாடு என்பதனால், அவற்றுக்கு இடையே பல நூற்றாண்டு நேரடி தொடர்புகள் உள்ள போதிலும், இலங்கைக்குள் அமெரிக்க சுமார் 40 வருடங்களுக்கு முன்னரே கால்தடம் பதித்து விட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா திட்டத்தின் மூலம் ஏற்கனவே இலங்கைக்குள் அமெரிக்கா தமது பிரவேசத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

பொருளாதார ரீதியில் தமது கட்டுப்பாட்டிற்குள் ஏனைய சர்வதேச நாடுகளை தன்வசம் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சீனா செயல்பட்டு வருவதாக அரசியல் ஆராய்வாளர் சிவ ராஜேந்திரன் தெரிவிக்கிறார்.

சீனாவின் ராஜ தந்திரம்


சீன வழியில் சோசலிஷம் என்ற அடிப்படையில், உலக பொருளாதாரத்தை ராணுவ ரீதியிலன்றி, தமது ஆதிக்கத்திற்குள் எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற திட்டங்களை சீனா அரசியல் ரீதியில் வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த திட்டத்திற்கு பொருளாதாரத்தை ஒரு உபாயமாக சீனா பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்பிரகாரமே, சீனா இலங்கைக்குள் பொருளாதார ரீதியில் நேரடி முதலீடுகளை செய்து, நேர தலையீட்டின் ஊடாக செயல்பட்டு வருவதாகவும் சிவ ராஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

இலங்கைக்குள் காணப்படுகின்ற பெரும்பாலான சொத்துக்கள் அனைத்தும் தற்போது இலங்கைக்கு சொந்தமானவையாக இல்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

பெருந்தோட்ட பகுதிகளில் பெரும்பாலானவை மற்றும் திருகோணமலையிலுள்ள பெரும்பாலான பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமானவையாகவும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட பெரும்பாலான திட்டங்கள் சீனாவிற்கு சொந்தமாவையாகவும இலங்கை இருந்து வருவதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறான விடயங்களை பார்க்கும் போது, இலங்கை ஒரு நாடாக, சிக்கலான நிலைமையை நோக்கி நகர்ந்து வருவதையே தான் உணர்வதாக அரசியல் ஆராய்வாளர் சிவ ராஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

இலங்கைக்கு இது பொருளாதார, அரசியல், கலை மற்றும் கலாசார ரீதியில் பாரிய சிக்கலான நிலைமைகளை தோற்றுவிக்க இடமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சர்வதேசத்தை பாதிப்புக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை முன்னிலைப்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை வல்லரசு நாடுகள் ஏற்படுத்திக் கொள்கின்றன எனவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, தானிய வகைகளுக்கு இந்தியாவை இலங்கை எதிர்பார்த்திருப்பதை போன்று, தொழில்நுட்ப விடயங்களுக்கு சீனாவை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், புவிசார் அரசியல், புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் இராணுவ விடயங்களுக்கு அமெரிக்காவை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் அச்சம் வெளியிடுகின்றார்.

தனி நபரின் வாழ்க்கையில் தலையீடு செய்து, அவரை கடனாளியாக மாற்றுவதை போன்றே, இலங்கையை கடனாளியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை வல்லரசு நாடுகள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிவ ராஜேந்திரன், தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வூ பெற்ற பீடாதிபதியும், அரசியல் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார்.