2025 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 ஆசனங்களையே பெறும்- இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

(ரீ.எல்.ஜவ்பர்கான்)
எதிர்வரும் 2025ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெறும். இது தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியதற்கான பலனாகும். 22- 16 ஆக மாறியது. 16 இப்போது 10 ஆக மாறியுள்ளது. இது 5 ஆக மாறப்போகிறது. இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் தொடர்ந்து பேசிய அவர், நான்கரை ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பாதுகாத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. ஆனால் அந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான எத்தகைய உரிமைகளையும் சலுகைகளையும் அவர்கள் பெற்றுக்கொடுக்கவில்லை.

மக்கள் விடுதலை முன்னணியினர் அன்றைய ரணில் அரசிற்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தனர். அப்போதும் இவர்கள் அதற்கு ஆதரவை வழங்கினார்கள்.

எந்தெந்த பிரேரணைகள் வந்தபோதும் அனைத்திற்கும் கை உயர்த்தினார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கான எந்த உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

குறைந்தது தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்யுங்கள் அப்போதுதான் ஆதரவு வழங்குவோம் என நிபந்தனை விதித்திருந்தால் கூட நிச்சயம் அது நடந்திருக்கும். ஆனால் எந்த நிபந்தனைகளுமின்றி வெறுமனே பேசா மடந்தைகளாக இருந்து முழு ஆதரவையும் வழங்கிவிட்டு தொடர்ந்தும் தமிழர்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள்.

அதற்கான தகுந்த பதிலைத்தான் தமிழ் மக்கள் இப்போது வழங்கியிருக்கிறார்கள் அடுத்த தேர்தலில் இதைவிட பன்மடங்கு வழங்க காத்திருக்கிறார்கள் என்றார்.