அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் புத்தகம் விற்பனையில் சாதனை!

(எம்.ஜே.எம் பாரிஸ்)
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எழுதியுள்ள ஏ புரோமிஸ்ட் லேண்ட்’ ( A Promised Land ) புத்தகம் முதல் நாள் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அந்தப் புத்தகத்தின் பதிப்பாளா் பெங்குயின் ராண்டம் ஹவுஸ் ( Penguin Random House ) நிறுவனம் கூறியுள்ளதாவது:-

ஒபாமா எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பு புத்தகமான ஏ புரோமிஸ்ட் லேண்ட் ( A Promised Land ) வெளியிடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அமெரிக்காவிலும் கனடாவிலும் 8 லட்சத்து 90 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. முன்பதிவு செய்து வாங்கப்பட்ட பிரதிகள், மின்னணுப் பிரதிகள், மற்றும் ஒலி வடிவப் பிரதிகளும் இதில் அடங்கும்.

எங்களது பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எந்தவொரு புத்தகமும் இதுவரை இவ்வளவு அதிக பிரதிகள் விற்பனையானதில்லை என்று அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னா், ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா எழுதிய ‘பீகமிங்’ ( Becoming ) புத்தகம்தான் பெங்குயின் ராண்டம் ஹவுஸ் ( Penguin Random House ) நிறுவனம் வெளியிட்ட ஒரே நாளில் மிக அதிகமாக விற்பனையானது.

2018ம் ஆண்டில் அந்தப் புத்தகம் வெளியான 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 25 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகின.

புதன்கிழமை நிலவரப்படி, அமேஸான் வலைதளத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் வரிசையில் பராக் ஒபாமாவின் ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’ முதலிடத்தில் உள்ளது.