தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஏறி நின்று நடத்துகின்ற அரசியலை இந்த மாகாணத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும்- இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

(சிஹாரா லத்திப் )
கடந்த இரண்டரை மாதங்களாக எமது வேலைகளை வேகப்படுத்த முடியாமல் இருக்கிறது. காரணம் இந்த கொவிட் 19 கொரோனா வைரஸ் பரவல். நிச்சயமாக கடவுள் அருளால் கொவிட் 19 விரைவாக கட்டுப்பாட்டுக்குள் வரும் அதன்பின்னர் நாங்கள் பாரிய வேலைகளை முன்னெடுப்போம் நீங்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்.

இவ்வாறு பின் தங்கிய கிராமிய அபிவிருத்தி மணி சார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு கரடியனாறு சின்ன புல்லுமலை பகுதியில் சபரிகம விசேட திட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய வீதிகளை திறந்து வைக்கும் நிகழ்வில் சிறப்பு உரையாற்றுகையில் கூறினார்.

முற்போக்கு தமிழர் கட்சியின் செங்கலடி பிரதேச அமைப்பாளர் சுந்தரலிங்கம் சுந்தர குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வுகளின் போது ராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எங்களுடைய மக்களுடைய இருப்பினை பாதுகாப்பதாக இருந்தால் உரிமையோடு கூடிய அபிவிருத்தி சார்ந்த உரிமைக்கு சமாந்தரமான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும் அதற்காக நீங்கள் அனைவரும் எம்முடன் கைகோர்த்து நிற்க வேண்டும். ஆத்மார்த்தமாக நாம் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். சேர்ந்து பயணிப்போம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் மீதுஏறி நின்று கொண்டு அரசியல் நடத்துகின்ற கேவலம் கெட்ட அரசியலை இந்த மாகாணத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும். இதற்கான முதற்கட்டம் தான் நாம் இந்த வருடத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியாகும் .

வருங்காலத்தில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு அந்தத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு சின்ன தீர்வினை கூட பெற்றுக் கொடுக்காமல் தமிழ் மக்களின் கண்ணீரை வைத்துக் கொண்டு கண்ணீரில் அரசியல் நடத்தும் அரசியல் பிழைப்பு கூலிகளை இந்த மாவட்டம் மாகாணத்திலிருந்து நாம் அப்புறப்படுத்த வேண்டும்.

எமது மக்களுக்கான பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதுடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய மக்களின் தேவைகளை அறிந்து தீர்த்துக் கொடுக்கக்கூடிய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும் .

அப்போதுதான் எமது மக்களும் மற்றைய சமூகங்களுக்கு சமாந்தரமாக வாழமுடியும் அப்படியான ஒரு சூழலை நாம் கட்டமைப்போம். ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பு கூடாக அப்படி ஒரு சூழலை நாம் உருவாக்குவோம். ஆகவே இனிவரும் காலங்களிலாவது நாம் ஒன்று சேர்ந்து பயணிப்போம்.

நமது காலம் முடிந்து விடலாம் நமக்கு முன்னே இருக்கின்ற அடுத்த தலைமுறையினர் சின்னஞ் சிறார்கள் இந்த தலைமுறையாவது கைகட்டி இன்னொருவருக்கு முன்னால் நிற்கக்கூடாது. மற்றவர்களுக்கு சமாந்தரமாக நிற்கவேண்டும் தலை நிமிர்ந்து வாழவேண்டும் அப்படியானதொரு சூழலை நாம் அடுத்த சந்ததிக்கு உருவாக்கிக் கொடுப்போம்.

ஆகவே கடந்த காலங்கள் கடந்தவையாக இருக்கட்டும் பலர் பல சவால்களை விட்டார்கள். நம் அரசாங்கம் கட்சியில் வெற்றி பெற்றால் மீசை எடுப்போம், இன்னும் ஒரு காமெடி அரசியல்வாதி இருக்கின்றார், வியாழேந்திரன் பாராளுமன்றத்திற்கு தெரிவானால் தான் வீதிவீதியாக ஆடையின்றி அலைந்து திரிவேன் என்றார். நாங்கள் வென்று விட்டோம் அவர்கள் அவர்களது சபதத்தை நிறைவேற்றியதாக இல்லை ஒரு விடயத்தை நான் தெளிவாகச் சொல்ல விரும்புகின்றேன், இந்த அரசியலில் இருந்து நாங்கள் விரும்பி ஒதுங்கினால் மட்டும் தான் ஒதுங்க முடியும். இல்லாவிட்டால் எங்களை தோல்வியடையச் செய்ய முடியாது. காரணம் எங்களோடு எங்களை சுற்றி நிற்பவர்கள் களப் போராளிகள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி எங்களோடு வேலை செய்பவர்கள். அவர்கள் இருக்கும் வரை எவராலும் எங்களை தோற்கடிக்க முடியாது.

வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு தமிழ் அரசியல்வாதி நான். இந்த வெற்றிக்கு உண்மையான சொந்தக்காரர்கள் கடவுள் அடுத்தாற்போல் எனக்கு வாக்களித்த அந்த 34 ஆயிரம் பேர். அந்த மக்கள் வாக்களிக்க மிகப் பிரதான மாக செயல்பட்டவர்கள் எமது கழ இணைப்பாளர்கள் அவர்களை ஒரு போதும் நாம் உயிருள்ளவரை கைவிட மாட்டோம்.

அவர்களுக்கான வேலைத்திட்டங்கள் சற்றுப் பிந்தி நடக்கலாம் எவ்வாறாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் நாம் பாதுகாப்போம்.