முடக்கப்பட்ட கல்முனை வடக்கில் 1200 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதி விநியோகம்!


( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை மாநகரில் முடக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்துக்குட்பட்ட 1200 குடும்பங்களுக்கு முதற்கட்ட கொரோனா நிவாரண உலருணவுப்பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையிலான குழுவினர் இவ்வுலருணவுப் பொதிகளை வீடுவீடாகச் சென்று விநியோகித்தனர்.

முதற்கட்டமாக தலா 5000ருபா பெறுமதியான பொதிகள் கடந்த நான்கு தினங்களாக கொட்டும் மழைக்கு மத்தியில் பிரதேசசெயலக ஊழியர்களால் வழங்கப்பட்டு வந்தது.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் இது பற்றிக் கருத்துரைக்கையில் ..

கல்முனை மாநகரில் முடக்கப்பட்ட 11 கிராமசேவையாளர் பிரிவுகளில் ஏழு(7)பிரிவுகள் எமது பிரதேசத்துள் வருகின்றன. அப்பிரிவுகளுள் வாழ்கின்ற வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 10ஆயிரம் ருபா பெறுமதியான நிவாரண உலருணவுப்பொதிகள் விநியோகிக்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்னன.

முதற்கட்டமாக 5000ருபா பெறுமதியான உலருணவுப்பொருட்கள் மழைக்குமத்தியிலும் எமது ஊழியர்கள் வழங்கிவைத்தனர்.

முடக்கப்பட்ட கல்முனையின் 11பிரிவுகளில் வாழும் வருமானம் குறைந்த சுமார் 3500குடும்பங்களுக்கு 10ஆயிரம் ருபா பெறுமதியான நிவாரணஉலருணவுப்பொதிகள் வழங்க மூன்றரைக்கோடி ருபா அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட 11பிரிவுகளில் எமது வடக்குபிரதேசத்தில் 1சி 1ஈ 2 2எ 2பி 3 3எ ஆகிய 07பிரிவுகள் உள்ளன. அங்கு 1865 குடும்பங்களைச்சேர்ந்த 6197பேர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் அரசஉத்தியோகத்தர்கள் வங்கி உள்ளிட்ட வருமானம்கூடிய தொழில் செய்பவர்களை விடுத்து சமுர்த்தி மற்றும் வருமானம் குறைந்த 1200குடும்பங்களுக்கு இந்நிவாரணப்பொதி வழங்கப்படுகிறது.