சிடாஸ் கனடா நிறுவனத்தினால் கல்குடா கல்வி வலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கிவைப்பு

(சித்தா)

சிடாஸ் கனடா நிறுவனம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை  சிடாஸ் சிறிலங்கா அமைப்பின் ஊடாக செயற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் இன்று (2021.01.13) கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலைகளான ஒருமுழச்சோலை சித்தி விநாயகர் வித்தியாலயம், மயிலவெட்டுவான் அ.த.க.பாடசாலை, சிங்காரத்தோப்பு சரஸ்வதி வித்தியாலயம், நெடியமடு அ.த.க.பாடசாலை, மீராவோடை சக்தி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் 576 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொவிட் 19 பரவல் காரணமாக வருமானத்தை இழந்துள்ள நிலையில் தொடர்மழை, வெள்ளப்பாதிப்பும் இணைந்து வெகுவாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் அனைவருக்கும் இக்கற்றல் உபகரணப் பொதி உரிய வேளையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் சிடாஸ் சிறிலங்கா அமைப்பின் தலைவர் திரு.க.பாஸ்கரன், செயலாளர் திரு.அ.சுகுமாரன்,செயற்குழு உறுப்பினர் திரு. சுவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உபகரணப் பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்