
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், கட்சியின் மட்டு அம்பாறை ஊடகப் பேச்சாளர் சாந்தன் உட்பட கட்சியின் மட்டக்களப்பு நிருவாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், முன்னாள் போராளிகள் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்தும், அண்மையில் சமூகவலைதள பதிவு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்பிலுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகப் பொறுப்பாளர் நாகராசா பிரதீபராசா அவர்களின் வழக்கு விடயங்கள் தொடர்பிலும் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுதல், முன்னாள் போராளிகளின் அரசியற் செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








.jpeg)



