இலங்கையில் ஸ்மார்ட் போன்கள், இலத்திரனியல் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்!



இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அரசாங்கம் விதித்திருக்கும் உத்தரவாத தொகை அதிகரிப்பு காரணமாக பெறுமதிமிக்க ஸ்மார்ட் போன் வகையான கையடக்க தொலைபேசிகளின் விலைகள் 15 சத வீதத்தினால் அதிகரிக்கலாம். அத்துடன் அனைத்து வகையான இலத்திரனியல் பொருட்களின் விலைகளும் தற்போதுள்ள விலையை விட 5 சத வீதத்தால் அதிகரிக்கலாம் என இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் உறுப்பினரும் இறக்குமதியாளருமான ஜே. உதயகுமார் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்திருக்கும் உத்தரவாத தொகை அதிகரிப்பு காரணமாக எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இறக்குமதிக்கான உத்தரவாத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதால் சாதாரண இறக்குமதியாளர்களே அதிகம் பாதிக்கப்படுவர்.

உத்தரவாத தொகையை முழுமையாக செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது அவர்கள் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்வார்கள். அதனால் அவர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. அதேபோன்று அவர்கள் உத்தரவாத தொகையை முழுமையாக செலுத்தி, நம்பிக்கையுடன் பொருட்களை இறக்குமதி செய்யவும் முடியாத நிலையே காணப்படுகிறது.

ஏனெனில் புதிதாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரிக்கப்படும். அவ்வாறான நிலையில் சாதாரண மக்கள் தங்களின் தேவைக்காக சாதாரணமாக கொள்வனவு செய்யும் பொருட்களை விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் கொள்வனவு செய்வதற்கு பின்வாங்குவார்கள். அதனால் இறக்குமதியை குறைக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.