ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தும் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை திணைக்களத்தினால் உள்ளுர் நெசவு ஆடை உற்பத்திகளை அரச உத்தியோகத்தர்களுக்கு அறிமுகப்படுத்தலும் விற்பனைகளும் திருக்கோவிலில் நேற்று இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைவாக அம்பாறை மாவட்ட கிராமிய தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.கனேந்திரனின் ஒழுங்கமைப்பில் திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் நேற்று இவ் உள்ளுர் நெசவு ஆடை உற்பத்திகளின் விற்பனை சந்தை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டு வரும் 25 நெசவு நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட நெசவு ஆடைகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டன.
உள்ளுர் நெசவு ஆடை உற்பத்தி விற்பனையினை திருக்கோவில் பிரதேச செயலாளர் ஆரம்பித்து வைத்திருந்ததுடன் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் இராஜரெத்தினம் கிராமிய தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு உள்ளுர் நெசவு ஆடை கொள்வனவுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.